உள்ளூர் செய்திகள்

திருப்பூருக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு!

திருப்பூர்: வரும், 2024 - 2025 ம் நிதியாண்டில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் கிளைகள் மூலம், 37 ஆயிரத்து, 834 கோடி ரூபாய் வளம் சார்ந்த கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 2024 - 2025 ம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், வரும் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையினை, கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார்.அதில் கூறியிருப்பதாவது:மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி கிளைகளின் மூலம், 2024 - 25 ம் ஆண்டில், வளம்சார்ந்த கடன் வழங்குவதற்கான இலக்கு, 37 ஆயிரத்து, 834 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட, 52.62 சதவீதம் அதிகம்.அடுத்த நிதியாண்டில், (2024 - 25) வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துணை தொழில்களுக்கான கடன், 12 ஆயிரத்து, 208 கோடி, நுண் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன், 22 ஆயிரத்து, 479 கோடி, ஏற்றுமதி, 1,053 கோடி, கல்வி கடன், 501.39 கோடி, வீடு கட்டுதல் மற்றும் மீன்சக்தி ஆகியவற்றுக்கு முறையே, 393.75 கோடி மற்றும் 435.07 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கூட்டத்தில், வங்கிகள், விவசாயத்துறை, நுண் சிறு மற்றும் குறு நிறுவனங்கள், கல்வி மற்றும் வீட்டுத் துறைகளுக்கான கடன்கள் தேவையற்ற தாமதமின்றி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி, ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர் அமிர்தவள்ளி, மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு வங்கி) அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்