உள்ளூர் செய்திகள்

மறுமதிப்பீட்டால் 37வது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு வந்தவர்

தந்தையை இழந்து வறுமையில் வாடும் இந்த மாணவர், குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரியில், ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பிரிவை தேர்வு செய்தார். அண்ணா பல்கலையில், பொதுப்பிரிவு கவுன்சிலிங் நேற்று துவங்கியது. ஏற்கனவே, தர வரிசைப் பட்டியல் வெளியிட்டபோது, திருச்சி மாணவி திவ்யா முதலிடத்தைப் பிடித்திருந்தார். இந்நிலையில், பிளஸ் 2 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலில் அதிகமான மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகரித்ததையடுத்து, தர வரிசைப் பட்டியல் மாற்றம் செய்யப்பட்டு, புதிய, "ரேங்க்&' பட்டியல் தயாரிக்கப்பட்டன. முதல் பட்டியலில் 37வது இடத்தில் இருந்த திண்டுக்கல் மாணவர் அசோக்குமார், மறுமதிப்பீட்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் இரண்டு மதிப்பெண்கள் (198+2) அதிகரித்ததை அடுத்து, முதல் இடத்திற்கு, வந்துள்ளார். ஏற்கனவே முதல் இடத்தைப் பிடித்திருந்த திவ்யா, இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இரண்டாம் இடம் பிடித்த திவ்யா, கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., படிப்பை தேர்வு செய்தார். மூன்றாம் இடம் பிடித்த யோகபரசுகன், குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பிரிவையும், நான்காம் இடம் பிடித்த சென்னை மாணவி மகாலட்சுமி, கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., பிரிவையும் தேர்வு செய்தனர்.ஐந்தாம் இடம் பிடித்த கோவை கே.கே.புதூர் மாணவி அர்ச்சனாவும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., பிரிவை தேர்வு செய்தார். முதல் 20 மாணவர்களில், அதிகமான மாணவர்கள் இ.சி.இ., பிரிவை தேர்வு செய்தனர். இதற்கு அடுத்ததாக, ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பிரிவை தேர்வு செய்தனர்.முதலிடம் பிடித்த மாணவர் அசோக்குமார் கூறியதாவது:எனது தந்தை இறந்துவிட்டார். திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் தான் எனது சொந்த ஊர். பத்தாம் வகுப்பு வரை சொந்த ஊரில் படித்தேன். பிளஸ் 1, பிளஸ் 2 மட்டும், ஈரோடு மாவட்டம் தாமரைபாளையத்தில் உள்ள தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பிளஸ் 2 தேர்வில், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய மூன்றிலும் 200க்கு 200 மதிப்பெண்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 198 மதிப்பெண்களும் எடுத்தேன். தமிழில் 189 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 188 மதிப்பெண்களும் கிடைத்தன. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்ததில் இரண்டு மதிப்பெண்கள் அதிகரித்து, 200க்கு 200 பெற்றேன். நான்காவது பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற முதல் மாணவர் என்ற அடிப்படையில், தர வரிசைப் பட்டியலில் எனக்கு முதலிடம் கிடைத்தது.இவ்வாறு அசோக்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்