புதிதாக 45 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!
ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கும் (எல்.ஐ.சி.,), அரசுத்துறை வங்கிகளுக்கும் வரும் மார்ச் மாதத்திற்குள் புதிதாக ஆட்கள் தேர்வு நடக்கிறது.ஆயுள் காப்பீட்டுக் கழகம் தன் நிர்வாகத்தின் திறமையை அதிகரிக்க, மார்ச் மாதத்திற்குள் 10 ஆயிரம் பேரைத் தேர்வு செய்கிறது. இத்தகவலைத் தெரிவித்த எல்.ஐ.சி., நிர்வாக டைரக்டர் ஏ.கே.தாஸ்குப்தா மேலும் கூறியதாவது:உலகம் முழுவதும் ஏற்பட்ட மந்தநிலை, எல்.ஐ.சி.,க்கு தடையாக இருக்காது. நாங்கள் விரிவுபடுத்தும் சூழ்நிலையில் இருப்பதால், தொழில்நுட்ப திறமை தெரிந்தவர்கள் 10 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர். அவர் களை வரும் மார்ச் மாதத்திற்குள் தேர்வு செய்வோம். இதில், மார்க்கெட்டிங்கில் 5,000 பேரும், மற்றவர்கள் நிர்வாகத் துறையிலும் பணியாற்றும் வகையில் தேர்வு செய்யப்படுவர்.இன்சூரன்ஸ் துறையில் 78 சதவீத மார்க்கெட்டிங் பங்கு உடைய பிரமாண்ட நிறுவனம் என்பதால், மார்க்கெட்டிங் துறையை பலப்படுத்தியாக வேண்டும்.இவ்வாறு தாஸ் குப்தா கூறினார்.இதே போல முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆட்கள் தேடும் முயற்சியில் மும்முரமாக இறங்கியிருக்கிறது. கிளார்க் வேலைக்கு 20 ஆயிரம் பேரும், மேற்பார்வைப் பணியாளர் பணியில் 5,000 பேரும் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவித்திருக்கிறது.அதே போல யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆப் இந்தியா ஆகிய அரசு பொதுத்துறை வங்கிகளும் புதிதாக வேலைக்கு ஆட்களைச் சேர்க்க திட்டமிட்டிருக்கிறது.யூனியன் பாங்கில் 5,000 பேரும், மற்ற வங்கிகளில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரையும் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வு அடுத்த சில மாதங்களில் மும்முரமாக இருக்கும். வரும் மார்ச் மாதத்திற்குள் 1,950 பேரை நியமிக்கப் போவதாக பாங்க் ஆப் பரோடா அறிவித்திருக்கிறது.