5 லட்சம் மாணவர்கள் இலக்கு; இதுவரை 1.50 லட்சமே சேர்ப்பு
சென்னை: அரசு தொடக்கப் பள்ளிகளில், 2025 -26ம் கல்வியாண்டில், ஐந்து லட்சம் மாணவர்கள் சேர்க்கை என்ற இலக்கை எட்ட, ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடக்க கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த வாரம் தேர்வுகள் முடிந்தன. தற்போது, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.ஜூன் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் முன், 2025 - 26ம் கல்வியாண்டுக்காக, ஐந்து லட்சம் மாணவர்களை பள்ளியில் சேர்க்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதை செயல்படுத்த, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற உத்தரவிடப் பட்டுள்ளது. இதுவரை, 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதனால், இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்தும்படி, தொடக்க கல்வித்துறை இணை இயக்குநர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு நேற்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.வரும் 2025 - 26ம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில், கடந்த மூன்று நாட்களில், மாணவர் சேர்க்கை புள்ளி விபரம் மிகவும் குறைந்துள்ளது. நாம் நிர்ணயித்துள்ள இலக்கை அடையும் வகையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.பள்ளி அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று, 5 வயது நிரம்பிய குழந்தைகள் உள்ள பெற்றோரிடம், அரசின் நலத்திட்டங்களை விளக்கி, அதே இடத்தில், ஸ்பாட் அட்மிஷன் அடிப்படையில், மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.இது குறித்து, வட்டார கல்வி அலுவலர்கள் வழியே அறிவுறுத்த வேண்டும். மாணவர் சேர்க்கை விபரங்களை, உடனே தொடக்க கல்வித் துறையால் அனுப்பப்பட்ட, கூகுள் பார்ம்மில் பதிவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.