உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு மறுதேர்வு: 60 கி.மீ., பயணம்

அன்னுார்: பத்தாம் வகுப்பு மறுதேர்வு எழுத, 60 கி.மீ., தொலைவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று பஸ்களில் பயணித்து தேர்வு எழுத வேண்டியுள்ளது என மாணவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. மே மாதம் தேர்வு முடிவு வெளியானது. இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் உடனடி மறு தேர்வு கடந்த 28ம் தேதி துவங்கியது. இந்த மறுதேர்வு மையமாக கோவை மாவட்டம் அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இங்கு தேர்வு எழுத வந்த மாணவர்கள் கூறியதாவது: செஞ்சேரிமலை, சூலுார், மதுக்கரை என மிக அதிக தொலைவில் உள்ள எங்களுக்கு மறுதேர்வுக்கு அருகாமையில் உள்ள அரசு பள்ளியில் தேர்வு மையம் அமைக்கவில்லை.இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மூன்று பஸ் மாறி 60 கி.மீ., பயணம் செய்து வந்து தேர்வு எழுத வேண்டி உள்ளது. அதுவும் குறிப்பாக மாணவியர் தனியாக வர முடியாத நிலை என்பதால் பெற்றோருடன் வர வேண்டி உள்ளது. அதிக பொருட்செலவு, நேர செலவு ஏற்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு இடத்தில் மறுதேர்வு மையம் அமைத்திருக்கலாம். அடுத்த முறையாவது மாணவ மாணவியருக்கு இந்த அலைச்சல் இல்லாமல் ஒவ்வொரு வட்டாரத்திலும் மறு தேர்வு மையம் அமைக்க வேண்டும். உடனடி மறு தேர்வு எழுதி, இதனுடைய முடிவுகள் வந்தவுடன் இந்த கல்வியாண்டிலேயே பிளஸ் 1 சேரலாம் என்பதால் தேர்ச்சி பெறாதவர்களில் பெரும்பாலானவர்கள் மறு தேர்வுக்கு வந்துள்ளோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்