உள்ளூர் செய்திகள்

128 முதுநிலை படிப்புகள் காலி; நிரப்ப அவகாசம் கோரி கடிதம்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள, 128 முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்ப அவகாசம் கோரி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் காலி இடங்களை நிரப்ப அவகாசம் கோரி எழுதிய கடிதத்திற்கு, சாதகமான பதிலை அளித்தீர்கள். அதனால், மாநிலத்தில் காலியாக உள்ள விலை மதிப்பற்ற எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.அதேபோல, எம்.டி., - எம்.எஸ்., - டி.என்.பி., மற்றும் எம்.டி.எஸ்., இடங்களுக்கான சேர்க்கை கவுன்சிலிங், அக்., 25ம் தேதியுடன் நிறைவடைந்தது. நான்கு சுற்று கவுன்சிலிங் முடிவில், 69 எம்.டி., - எம்.எஸ்., உள்ளிட்ட, 128 முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களை நிரப்புவது மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் உதவியாக இருக்கும். எனவே, கூடுதல் சுற்று கவுன்சிலிங் நடத்த அனுமதிக்கும் வகையில், முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதியை நீட்டிக்குமாறு, தேசிய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்.உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளை பொறுத்தவரையில், தமிழகத்தில் அதிக இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் மாநில ஒதுக்கீட்டில், 50 சதவீதம், அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக, அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்கும். இதற்கு, அனுமதி அளித்ததற்கு நன்றி.அதேபோல, முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்பும் விவகாரத்தில், மாணவர்களுக்கும், மாநில சுகாதார அமைப்புக்கும் பெரும் பயனளிக்கும் ஆக்கப்பூர்வமான பதிலை விரைந்து பெறுவோம் என நம்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்