உள்ளூர் செய்திகள்

1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் கட்!

சென்னை: உரிய சான்றுகள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் தான், மெட்ரிக் பள்ளிகளின் உரிமங்களை நீட்டிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இது தொடர்பாக, தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அளித்துள்ள விளக்கம்:தமிழகத்தில், 9,315 மெட்ரிகுலேஷன், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன. பள்ளி கட்டட உரிமைச்சான்று, உறுதிச் சான்று, சுகாதார சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று போன்றவற்றை புதுப்பித்திருக்க வேண்டும். மேலும், பள்ளி கட்டட வரைபட ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.கட்டடம் சொந்தமாகவோ அல்லது 15 ஆண்டுகளுக்கு குத்தகையாகவோ, வாடகையாகவோ பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், சில கட்டடங்களுக்கு ஒப்புதல் பெறப்படவில்லை. 2011க்கு முன் அனைத்து பள்ளி கட்டடங்களும் கட்டப்பட்ட நிலையில், ஊராட்சி தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லை.டி.டி.சி.பி., நகரமைப்பு துறையின் திட்ட அனுமதி பெறாப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால், 2023க்கு பின், பல பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க முடியவில்லை.அதேபோல, 2019க்கு முன்னும், பின்னும் கட்டப்பட்ட பல பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளுக்கும் ஒப்புதல் பெறப்படவில்லை. சில பள்ளிகளுக்கு, 2022ல் சிறப்பு அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனாலும், 1,717 பள்ளிகள் முறையான கட்டட அனுமதி பெறாமல் இயங்குகின்றன.இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாலும், போதிய வகுப்பறை இல்லாதது, கட்டட உரிமங்கள் மீது வங்கிக்கடன் பெற்றிருப்பது போன்ற காரணங்களாலும் அங்கீகாரம் நீட்டிக்கப்படவில்லை.இவ்வாறு விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்