1,800க்கும் மேல் மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில் பாதுகாப்பு கேள்விக்குறி
திருவொற்றியூர்: திருவொற்றியூரில் உள்ள பழமை வாய்ந்த, 1,800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயிலும் அரசு பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருவொற்றியூர் புது பேருந்து நிலையம் அருகே, ஜெய் கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 1,800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இந்த பள்ளியில் இருந்து, மின்விசிறிகள், சிசிடிவி கேமராக்கள், எல்.இ.டி., விளக்குகள், அடிக்கடி காணாமல் போயின. ஆரம்பத்தில், சிறு திருட்டு என்பதால், பள்ளி நிர்வாகத்தின் கவனத்தில் வரவில்லை. நாளடைவில் திருட்டு என்பது தொடர்கதையாக மாறியது.அந்தவகையில், பல நாட்களாக 42 மின்விசிறிகள், நான்கு சிசிடிவி கேமராக்கள், 12 எல்.இ.டி., விளக்குகள் காணாமல் போயின. இது குறித்து, திருவொற்றியூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.அதன்படி, வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை தேடினர். ஆனால், கேமராக்கள் அனைத்தும், ஆசிரியர்கள் ஓய்வறையில் வைக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் குறித்த துப்பு ஏதும் கிடைக்கவில்லை.பின், போலீசாரே தீவிர விசாரணை நடத்தி, மூவரை கைது செய்து பொருட்களை மீட்டனர். அரசுப் பள்ளியில் இரவு நேர காவலாளி பணியிடம், பல மாதங்களாக காலியாக இருப்பதை அறிந்தே, தொடர் திருட்டு நடந்தது தெரியவந்துள்ளது.எனவே, சிசிடிவி கேமராக்களை, பள்ளியின் வளாக நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு, அமைக்க வேண்டும். காலியாக இருக்கும், இரவு நேர காவலாளி பணியிடத்தை நிரப்பிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளி தொடர்புடைய ஆண்டு கணக்கிலான ஆவணங்கள், மாணவ - மாணவியரின் சான்றிதழ்கள் ஏராளமாக உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.