2ம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழா பெங்களூரில் நாளை துவக்கம்
பெங்களூரு: தொடர்ந்து, இரண்டாவது ஆண்டாக, பெங்களூரு தமிழ் புத்தக திருவிழா நாளை துவங்குகிறது.கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டு, பெங்களூரு தமிழ் புத்தக திருவிழா நாளை துவங்குகிறது. மொத்தம் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. சிவாஜிநகர் அம்பேத்கர் வீதி இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிரே உள்ள, இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் நடக்கும் துவக்க விழாவிற்கு கர்நாடக சுற்றுலா துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் தலைமை வகிக்கிறார். சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் துவக்கி வைக்கிறார்.பெங்களூரு மத்திய தொகுதி பா.ஜ., எம்.பி., மோகன், சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் ஹர்ஷத், பெங்களூரு தமிழ் சங்க தலைவர் தாமோதரன், தமிழ் இயக்க தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் தனஞ்ஜெயன் சிறப்புரை ஆற்றுகின்றனர். புத்தக திருவிழாவில் 27 அரங்குகள் இடம்பெறுகின்றன.தமிழ் புத்தக திருவிழா தொடர்பான, நிகழ்ச்சி நிரல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்பின் புத்தக திருவிழா தலைவர் வணங்காமுடி பேசுகையில், தமிழகத்தில் மட்டும், புத்தக திருவிழா நடத்த வேண்டும் என்பது இல்லை. தமிழர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் நடத்த வேண்டும். இது தான் சிறப்பு. கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தினர், புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர். புத்தக திருவிழாவில் முக்கிய பிரமுகர்கள், தமிழ் ஆளுமைகள் பங்கேற்கின்றனர், என்றார்.மாணவர்களுக்கான மொழி திறன் போட்டிகள் நடத்தும் ஆசிரியை கார்த்தியாயினி கூறுகையில், கடந்த ஆண்டு முதல் முறையாக தமிழ் புத்தக திருவிழா நடத்தப்பட்டது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இம்முறையும் 10 நாட்கள் நடத்த உள்ளோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கிறோம்.முதல் வகுப்பு முதல் கல்லுாரி வரை படிக்கும், மாணவர்களுக்காக வினாடி - வினா; கவிதை, கட்டுரை உட்பட பல போட்டிகள் நடக்க உள்ளன. மொத்த பரிசு தொகை ஒரு லட்சம் ரூபாய். மாணவர்கள் தவறாமல், கலந்து கொள்ள வேண்டும் என்றார்.தமிழ் மரபு விளையாட்டு பொறுப்பாளர் இமாக்குலின் அந்தோணி கூறுகையில், தமிழ் புத்தக திருவிழா நடக்கும் 10 நாட்களும் தமிழ் மரபு விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிகளில் தாயம், பம்பரம், கொட்டாங்குச்சி உட்பட 150 பராம்பரிய விளையாட்டுகளை காட்சிப்படுத்த உள்ளோம், என்றார்.