210 மாணவர்களுக்கு இரண்டே ஆசிரியர்கள்: உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தியும் பலனில்லை
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் 210 மாணவர்களுக்கு தமிழ், கணிதம் என இரண்டே ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். 2025 செப்.,ல் தான் நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. மாற்றியும் பயனில்லாத சூழல் உள்ளதால் மாணவர்கள் தவிக்கின்றனர்.விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளி 2025 செப்.,ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 210 மாணவர்கள் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கின்றனர். இந்தாண்டு தான் கூடுதலாக 9, 10 வகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக புதிதாக 6 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.இப்பள்ளியில் தற்போது தமிழ், கணிதம் என இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் பணியில் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கபபடுகிறது. எனவே இப்பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து 23வது வார்டு நகராட்சி கவுன்சிலர் சுல்தான் அலாவுதீன், கலெக்டர் சுகபுத்ராவிடம் மனு அளித்துள்ளார்.இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வேறு நடக்கவுள்ள நிலையில் இதர பாடங்களான ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் இருப்பது அவசியமாக உள்ளது. 7 பணியிடங்கள் காலியாக உள்ளது. இங்கு தமிழ் வழி, ஆங்கில வழி என இருவழியிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.ஆசிரியர்களே இல்லாததால் டி.சி., கொடுங்கள் என பெற்றோர் கேட்கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் எப்படி இருநுாறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கவனிப்பர் என கேள்வி எழுப்புகின்றனர்.உயர்நிலைப் பள்ளியாக மாற்ற இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். அதை நிறைவேற்றிய நிலையில், ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பபடாதது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இப்பள்ளிக்கு குடிநீர் வசதி இல்லை. வெளியில் குடிநீர் வாங்கி தான் பயன்படுத்துகின்றனர். இதற்கும் மாணவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.