28 தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை அதிகாரிகள் முடிவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கட்டட அனுமதி பெறாமல் இயங்கி வரும் 28 தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரிகள் ஊரமைப்பு துறையினரிடம் முறையாக அனுமதி பெறாமலும், விதி மீறி கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. போதிய இட வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமலும், அனுமதி பெறாமலும் உள்ள கட்டடங்களால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணமும் முறையாக கிடைக்காமல், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை சீல் வைத்து மூடுவதற்கு, தமிழக நகர ஊரமைப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில், தனியார் பள்ளிகள், கலைக்கல்லுாரிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என 35க்கும் மேற்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் 16 தனியார் கல்லுாரிகள் மற்றும் 12 தனியார் பள்ளிகள், ஊரமைப்பு துறையிடம் முறையான அனுமதி பெறாமல், விதிமீறல் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இவற்றுக்கு சீல் வைக்க, உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஊரமைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், "நகர ஊரமைப்பு ஆணையர் உத்தரவுப்படி, அனுமதியற்ற கல்வி நிறுவனங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை பெற்று, அனுமதியில்லாமல் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் இப்பணிகள் துவங்கும்" என்றனர்.