3900 ஆர்.டி.இ., இடங்களுக்கு 8600 விண்ணப்பங்கள்; மே 28ல் குலுக்கலில் தேர்வு
மதுரை: மதுரையில் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்.டி.இ.,) 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கைக்காக 8600 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.மாவட்டத்தில் 391 நர்சரி பிரைமரி பள்ளிகளில் 1966, மெட்ரிக் பள்ளிகளில் 2017 உட்பட 3998 இடங்கள் ஆர்.டி.இ.,யில் (25 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 10 நாட்களாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன. நேற்றுடன் 8600 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. மே 25 வரை விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகள் நடக்கும். இதுவரை 7861 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 98 நிராகரிக்கப்பட்டது. 551 விண்ணப்பங்களுக்கு சரியாக ஆவணங்கள் இல்லை. இன்னும் 150 மனுக்கள் சரிபார்க்கப்படவுள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில் சரியான ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் குறித்து உரிய நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மே 27 க்குள் இணையதளத்தில் உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய வாய்ப்புஉள்ளது. 27ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். கூடுதல் விண்ணப்பம் வரப்பெற்ற இடங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மே 28ல் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.