அன்புக்கரங்கள் திட்டத்தில் பணம் வராததால் தவிப்பு
விருதுநகர்: தமிழகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, உதவித்தொகை வழங்கும், 'அன்புக்கரங்கள்' திட்டத்தில், அக்டோபர் மாதத்திற்கான பணம் இதுவரை வரவாகவில்லை.பெற்றோர் இருவரையும் இழந்தவர் அல்லது ஒருவரை இழந்து மற்றொருவரால் பராமரிக்க முடியாத குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும், 'அன்புக்கரங்கள்' திட்டத்தில், குழந்தைகளுக்கு, 18 வயது வரை மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.முதற்கட்டமாக, 6,082 குழந்தைகளை பயனாளிகளாக அரசு தேர்வு செய்துள்ளது. இந்தாண்டு செப்டம்பர், 15ல் திட்டம் துவங்கப்பட்ட நிலையில், அக்டோபர் மாதத்திற்கான உதவித்தொகை தற்போது வரை வரவு வைக்கப்படவில்லை.மகளிர் உரிமைத்தொகை போல, மாதாமாதம் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், அக்., 23ம் தேதி ஆகியும் தற்போது வரை வரவு வைக்கப் படாமல் உள்ளது. இந்த உதவித்தொகை, பெற்றோரை இழந்து பாட்டி அல்லது தாத்தா பராமரிப்பில் இருந்து வரும் குழந்தைகளின் கல்வி செலவுக்கு ஆதாரமாக இருக்கும் என்று எண்ணப்பட்டது.இந்நிலையில், 2ம் கட்ட பட்டியல்களும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இன்னும் வரவு வைக்கப்படாததால் பயனாளிகள் தவிப்பில் உள்ளனர்.