உள்ளூர் செய்திகள்

700 அண்ணா பல்கலை மாணவர்களுக்கு வேலை!

அண்ணா பல்கலையில் 2009 - 2010ம் கல்வி ஆண்டுக்கான வளாகத்தேர்வு கடந்த ஜூன் 22ம் தேதி நடந்தது. இதில், பல்வேறு தொழில்நுட்பத் துறைகளைச் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் 1,640 பேர் தேர்வு எழுதினர். ஜூன் 24ம் தேதி தேர்வு முடிவு வெளியான போது, 1,345 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு கடந்த 20ம் தேதி நடந்தது. காக்னிசன்ட் நிறுவனம் சார்பில், அண்ணா பல்கலைக் கழகத்தில் நடத்திய நேர்மு-கத் தேர்வில் 700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பி.டெக்., படிப்பில் செராமிக் டெக்னாலஜி, கெமிக்கல், புட் டெக்னாலஜி, இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, பார்மசூடிக்கல், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி, டெக்ஸ்டைல், ஐ.டி., துறைகளைச் சேர்ந்த 164 மாணவர்கள், பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். பி.இ., படிப்பில் மெக்கானிக்கல், ஏரோநாட்டிகல், விவசாயம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம், ஆட்டோமொபைல், சிவில், சி.எஸ்.இ., இ.சி.இ., இ.இ.இ., ஜியோ இன்பர்மேடிக், இன்டஸ்ட்ரியல், மெக்கானிக்கல், பிரின்டிங், புரொடக்ஷன் துறைகளைச் சேர்ந்த 367 மாணவர்கள், பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். அதே போல் எம்.எஸ்சி., படித்த பல்வேறு துறை மாணவர்கள் ஒன்பது பேர், எம்.டெக்., படித்த மாணவர்கள் 28 பேர், எம்.எஸ்சி., (இன்டெக்ரேடட்) படித்த 26 பேர், எம்.சி.ஏ., படித்த 38 பேர், எம்.இ., படித்த 68 பேர், பல்கலை வளாகத்தில் நடந்த நேர்முகத்தேர்வில் பணி வாய்ப்பு பெற்றனர். பணி வாய்ப்பு பெற்ற மாணவர்கள் பட்டியல் வெளியீட்டு விழா, அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்தது. மாணவர் பட்டியலை, துணைவேந்தர் மன்னர் ஜவகர் வெளியிட்டார். பல்கலை - தொழில்துறை கூட்டமைப்பு துறை இயக்குனர் செல்வம், துணைத் தலைவர் ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் துணைவேந்தர், பிரம்மாண்டமான கேக் வெட்டி மாணவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். வளாகத்தேர்வின் மூலம் பணி வாய்ப்பு பெற்ற மாணவர்கள் பட்டியல், பல்கலை வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்