8 பழங்குடி நல உறைவிட பள்ளிகள் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு
சேலம்: எட்டு பழங்குடியின நல உறைவிட பள்ளிகளை தரம் உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பழங்குடியின நலத்துறை சார்பில், பழங்குடியினர் அதிகம் உள்ள பகுதிகளில், மாணவ, மாணவியர் தங்கி படிக்க, விடுதி வசதியுடன், 300க்கும் மேற்பட்ட பழங்குடியினர் நல உறைவிட பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 10ம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தொடர்ந்து, பிளஸ் 2 வரை படிக்கும்படி தரம் உயர்த்தப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை கிளாக்காடு மற்றும் பாச்சேரி உயர்நிலைப்பள்ளிகள்; தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கலசப்பாடி; ஈரோடு, தாளவாடி தலமலை; சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஓடைக்காட்டுபுதுார்; நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவாலா; திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை அரசவெளி ஆகிய இடங்களில் உள்ள உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மன்னுார் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலர் லட்சுமிபிரியா, நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டுள்ளார்.அதில் நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிக்கு, ஒரு பள்ளிக்கு, 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் வீதம், 7 பள்ளிகளுக்கு, 63 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், தலா ஒன்று வீதம், 7 கணினி பயிற்றுனர் பணியிடங்களும், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.மேலும், 2 உதவியாளர், 6 ஆய்வக உதவியாளர், 2 தட்டச்சர், 3 அலுவலக உதவியாளர், 3 காவலாளி, 3 சமையலர், ஒரு துாய்மை பணியாளர் என, 97 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு சம்பளம், கட்டுமான பணி, உபகரண கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு, 38.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.