ரூ.8 கோடி மதிப்பில் பள்ளிக்கு புது கட்டடங்கள்
புளியந்தோப்பு: சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலமான திரு.வி.க., நகர் மண்டலத்தின் 73வது வார்டில் உள்ள பள்ளி கட்டடங்கள் பழுதாகியுள்ளது குறித்து, அப்பகுதி கவுன்சிலர் மூலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.திரு.வி.க., நகர் மண்டலம், புளியந்தோப்பு மன்னார்சாமி தெருவில் பழுதடைந்துள்ள சென்னை உருது நடுநிலைப் பள்ளி கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக மூன்றடுக்கு கட்டடம் கட்டப்பட உள்ளது. 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இதற்கான ஒப்பந்த பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.அதேபோல், திருவேங்கடம் தெருவில் உள்ள சென்னை ஆரம்ப பள்ளியில், சிங்கார சென்னை - 2.0 திட்டத்தின் கீழ், பழுதடைந்த பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு, இரண்டடுக்கு கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.இதற்காக, 5 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்த பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பள்ளி கட்டட பணிகளும் விரைவில் துவங்கப்பட உள்ளன.