உள்ளூர் செய்திகள்

80 வயதானாலும் டாக்டர்கள் கற்க வேண்டும்!

சென்னை: டாக்டர்கள் 80 வயதானாலும் கற்றுக் கொண்டே இருப்பதுடன், மருத்துவத்தை தொழிலாக பார்க்காமல், குடும்பத்தில் ஒருவராக இருந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேசினார்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 36வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டியில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்தது. பல்கலை வேந்தரும் கவர்னருமான ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.எம்.பி.பி.எஸ்., படிப்பை நிறைவு செய்த, 6,753 பேர், பல் மருத்துவம், 1,944 பேர்; இந்திய மருத்துவம் படிப்பு, 2,002; துணை மருத்துவ படிப்பு, 18,986 பேர் என, 29,685 பேருக்கு, கவர்னர் பட்டங்களை வழங்கினார். இதில், 134 மாணவர்களுக்கு நேரடியாகவும், 29,551 மாணவர்களுக்கு அந்தந்த கல்லுாரிகள் வாயிலாகவும் பட்டங்கள் வழங்கப்பட்டன.மேலும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ், நர்சிங், தொழில் சிகிச்சை, பார்மசி, பிசியோதெரபி ஆகிய படிப்புகளில் சிறந்து விளங்கிய, 73 மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. 21 மாணவர்களுக்கு வெள்ளி பதக்கம்; பல்கலை சார்பில், 48 பதக்கங்கள் என, 179 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.அதிகபட்சமாக, சென்னை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மாணவி சிந்து 10 பதக்கங்கள், ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி மாணவர் முகமதி யாசின், ஒன்பது பதக்கங்களை பெற்றனர்.பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேசியதாவது:மாணவ பருவத்தை கடந்து, சமுதாயத்தை கட்டமைக்கும் பொறுப்புடன், தொழில் சார்ந்த துறைக்குள் நுழையவிருக்கும் நீங்கள், உங்கள் மனம் சொல்வதை பின்பற்றுங்கள். அனைத்தையும் அறிந்தவர் என்பதால் புத்திசாலி கிடையாது. கிடைத்த அறிவு, செல்வம் வலிமையை கொண்டு மனித உயிர்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவ வேண்டும்.மருத்துவம் என்பது தொழில் அல்ல; சிகிச்சை அளிக்கும் போது, நோயாளிகளின் குடும்பத்தில் இருந்து பார்க்க வேண்டும். இன்றுடன் உங்களது படிப்புகள் முடிவடைந்து விடுவதில்லை. 20 வயதானாலும், 80 வயதானாலும் கற்றுக் கொண்டே இருங்கள். தினமும் கற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு வயதாகாது.நெல்சன் மண்டேலா கூறியது போல் கல்வி மிகப்பெரிய ஆயுதம். அதை வைத்து உலகத்தை மாற்றி அமைக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.மருத்துவ பல்கலை துணை வேந்தர் நாராயணசாமி பேசுகையில், மருத்துவ பல்கலையில், 100 கோடி ரூபாய் மதிப்பில் நவீன ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது. இதற்காக, தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களுடன், ஆராய்ச்சிக்காக தனித்துறை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ககன்தீப்சிங் பேடி, மருத்துவ பல்கலை பதிவாளர் அஸ்வந்த் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்