உள்ளூர் செய்திகள்

9, 10ம் வகுப்புகளில் இயலாக் குழந்தைகள் கணக்கெடுப்பு

சேலம்: அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களில், இயலாக்குழந்தைகளை கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்ட அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 604 மாணவ, மாணவியர், இயலாக்குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளனர். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 14 வயது முதல், 16 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு, கல்வி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி கற்பதில் உள்ள தடங்கல்களை களைய, இயலாக்குழந்தைகளை கணக்கெடுத்து, அவர்களுக்கு சிறப்புக்கல்வி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில், 105 சிறப்பாசிரியர்களை கொண்டு, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரிடையே சோதனை நடத்தப்பட்டது. இதில், 141 மாணவ, மாணவியர் கேட்பதில் குறைபாடு கொண்டவர்களாகவும், 167 பேர் உடல் உறுப்பு குறைபாடு உடையவர்களாகவும், 37 பேர் பேசும் திறனில் குறைபாடு, 27 பேர் பார்வையற்றவர்கள், 113 பேர் பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் என, மொத்தம், 604 மாணவ, மாணவியர், இயலாக்குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்பு உபகரணங்கள், கல்வி சாதனங்கள், சிகிச்சை உள்ளிட்டவை அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்