''தமிழகத்தில், 1,167 நிதி நிறுவனங்களால், 9 லட்சத்து, 13,971 முதலீட்டாளர்களிடம், 14,346.80 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 3 லட்சத்து, 98,525 பேருக்கு, 664.89 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது,'' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் கூறினார்.அவர் கூறியதாவது:
தமிழக காவல் துறையில், வணிக குற்ற புலனாய்வு பிரிவையும் இணைத்து, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு செயல்படுகிறது. மே 31ம் தேதி வரை, 1,167 நிதி நிறுவனங்களால், 9 லட்சத்து, 13,971 முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து, 14,346.80 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 3,795 பேர் மீது, 653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவற்றில், போலீஸ் அதிகாரிகளின் விசாரணையில், 307 வழக்குகளும், நீதிமன்ற விசாரணையில், 346 வழக்குகளும் உள்ளன. வழக்குகளில் சிக்கிய, 3,795 பேரில் முகவர்கள் உட்பட, 1,845 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்குகளின் விசாரணையில், மோசடி நிதி நிறுவனங்களிடம் இருந்து, 36,210 முகவர்கள், கமிஷன் தொகையாக, 702.27 கோடி ரூபாய் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. முகவர்கள் மட்டும், 125 பேர் கைதாகியுள்ளனர். அவர்களில், 55 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளன. அதேபோல், மோசடி நிதி நிறுவனங்களின் இயக்குனர்களின், 2,770.74 கோடி ரூபாய் மதிப்புள்ள, 7,521 வகையான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், 3,614 வகையான, 1,267 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுஉள்ளன. அதில், 120.47 கோடி ரூபாய் இருந்த, 433 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ஒப்படைப்பு
வெளிநாடுகளுக்கு தப்பிய, மோசடி நிதி நிறுவன இயக்குனர்களுக்கு எதிராக, 11 'ரெட்கார்னர் நோட்டீஸ், 33 லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில், 4,607 பேரை, வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் முன் ஆஜர்படுத்தி, மோசடி நிதி நிறுவனங்களிடம் இருந்து மீட்கப்பட்ட, 19.68 கோடி ரூபாய், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதேபோல, நீதிமன்றம் வாயிலாக, 3 லட்சத்து, 93,918 முதலீட்டாளர்களுக்கு, 645.21 கோடி ரூபாய் என, மொத்தம், 664.89 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து, இரண்டு ஆண்டுகளில், 2,368 விழிப்புணர்வு பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 20 வழக்குகள்
இந்த ஆண்டில், ஆருத்ரா, ஹிஜாவு என, 22 நிதி நிறுவனங்கள் மோசடி செய்தது தொடர்பாக, 87 பேருக்கு எதிராக, 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3,703 பேரிடம், 157.44 கோடி ரூபாய் மோசடி நடந்துஉள்ளது. இது தொடர்பாக, 141 பேரை கைது செய்துள்ளோம். மோசடி நிதி நிறுவனங்களின், 104.05 கோடி ரூபாய் மதிப்புள்ள, 730 வகையான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், 91 வகையான, 25.81 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில், 1,088 பேருக்கு, 7.47 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைத்துள்ளோம். தொடர்ந்து மோசடி பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -