கோவை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில், 17.37 சதவீத ஓட்டுகளையே அ.தி.மு.க., பெற்றிருக்கிறது. அ.தி.மு..க., ஓட்டுகள் மூன்றாக பிரிந்திருப்பது, ஓட்டு எண்ணிக்கையில் தெரியவந்துள்ளது.கோவை லோக்சபா தொகுதியில், ஐந்து லட்சத்து, 68 ஆயிரத்து, 200 ஓட்டுகள் பெற்ற தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமார், ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 068 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, செல்லத்தக்க ஓட்டுகளில் இவர் பெற்றதை கணக்கிட்டால், 41.74 சதவீதம்.இதேபோல், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நான்கு லட்சத்து, 50 ஆயிரத்து, 132 ஓட்டுகள் பெற்றிருக்கிறார். இது, 33.07 சதவீதம். அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், இரண்டு லட்சத்து, 36 ஆயிரத்து, 490 ஓட்டுகள் பெற்றுள்ளார். இது, 17.37 சதவீதம். உண்மை புள்ளி விபரம் எது
சில தினங்களுக்கு முன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டியளித்தபோது, 'ஜார்க்கண்ட் மாநில கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் முந்தைய தேர்தல்களில் பெற்ற ஓட்டுகளை விட அண்ணாமலை குறைவாக பெற்றிருக்கிறார்' என குறிப்பிட்டார். இது, உண்மையென நினைத்து, பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.பா.ஜ., சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், இதுவரை ஐந்து முறை தேர்தலில் போட்டியிட்டு, இரண்டு முறை வென்றிருக்கிறார். 1998ல் பெற்ற ஓட்டுகள் - 4,49,229 (55.85 சதவீதம் - வெற்றி). அதன்பின், 1999ல் நடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகள் - 4,30,068 (49.21 சதவீதம் - வெற்றி). கடந்த, 2004 தேர்தலில் பெற்ற ஓட்டுகள் - 3,40,476 (38.74 சதவீதம் - தோல்வி). 2014 தேர்தலில் பெற்ற ஓட்டுகள் - 3,89,701 (33.62 சதவீதம் - தோல்வி). 2019 தேர்தலில் பெற்ற ஓட்டுகள் - 3,92,007 (31.47 சதவீதம் - அ.தி.மு.க., கூட்டணி - தோல்வி).நடந்து முடிந்த தேர்தலில் அண்ணாமலை பெற்றுள்ள ஓட்டு - 4,50,132. இது, செல்லத்தக்க ஓட்டுகளில், 33.07 சதவீதம் என தேர்தல் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க., ஓட்டு சரிவு
ஆனால், அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் சரிந்திருக்கிறது என்பதை முன்னாள் அமைச்சர் வேலுமணி இன்னும் உணராமல் இருக்கிறார். ஏனெனில், 2014ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட நாகராஜன், 4,31,717 ஓட்டுகள் (37.24 சதவீதம்) பெற்று, வெற்றி பெற்றார். இத்தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது பா.ஜ., அக்கட்சி வேட்பாளரான ராதாகிருஷ்ணன், 3,89,701 ஓட்டுகள் (33.62 சதவீதம்) பெற்றிருந்தார். தி.மு.க., வேட்பாளர் கணேஷ்குமார் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.அடுத்து வந்த, 2019 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ., போட்டியிட்டு, 5,17,150 ஓட்டுகள் (45.85 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றது. இத்தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியோடு பா.ஜ., களம் கண்டது. இருப்பினும், ராதாகிருஷ்ணன், 3,92,007 ஓட்டுகளே (32.47 சதவீதம்) பெற்றார்.2014ல் பெற்ற ஓட்டுக்களை கணக்கிட்டால், (அ.தி.மு.க., - 4,31,717, பா.ஜ., - 3,89,701), 2019 தேர்தலில், 8,21,418 ஓட்டுகளை பெற்றிருக்க வேண்டும். ஆனால், 2,306 ஓட்டுகளே அதிகம் பெற்று, தோல்வியடைந்தார். அ.தி.மு.க., ஓட்டுகள் பெருவாரியாக, தி.மு.க., கூட்டணிக்கு சென்றிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. கவர்னர் அறிவுரை
இதை புரிந்துகொண்ட ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட பின், கோவையில் நடந்த பாராட்டு விழா ஒன்றில் பேசும்போது, வேலுமணி தயவின்றி தேர்தலில் ஜெயிக்க முடியாது என்கிற பொருள் வரும் வகையில், வானதிக்கு நேரடியாக அறிவுரை கூறினார். இதன் காரணமாகவே, அ.தி.மு.க., கூட்டணி இல்லை என்றதும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வானதி பின்வாங்கினார்.இருப்பினும், கோவை லோக்சபா தொகுதியில் ஐந்து சட்டசபை தொகுதிகளை கைவசம் வைத்திருக்கும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்டமைத்துள்ள வலுவான கூட்டணியை எதிர்த்து, சிறிய கட்சிகளுடன் இணைந்து பா.ஜ., தேர்தலை எதிர்கொண்டது. வேலுமணி கூறியது போலவே, பா.ம.க., மற்றும் வாசன் கட்சி, சரத்குமார் கட்சிகளுக்கு பெரிதளவில் ஓட்டு வங்கி இல்லை. என்றாலும் கூட, 4.50 லட்சம் ஓட்டுகளை அண்ணாமலை பெற்றிருக்கிறார். பிளவுபட்ட ஓட்டு
ஜெ., முதல்வராக இருந்தபோது, 2014 தேர்தலில் அ.தி.மு.க., பெற்ற ஓட்டு - 4,31,717 (37.24 சதவீதம்). பத்து ஆண்டுகளுக்கு பின், இப்போது மீண்டும் போட்டியிட்டதில், 2,36,490 ஓட்டுகளே பெற்றிருக்கிறது; இது, 17.37 சதவீதம். இதற்கு காரணம் - அ.தி.மு.க., ஓட்டுகள் மூன்றாக பிளவுபட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர்., - ஜெ., தீவிர விசுவாசிகள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்துள்ளனர். மற்றவர்கள், தி.மு.க., வுக்கும், பா.ஜ.,வுக்கும் ஓட்டளித்திருக்கின்றனர். இதன் காரணமாகவே, அ.தி.மு.க., ஓட்டு வங்கி கோவையில் வெகுவாக சரிந்திருக்கிறது. சட்டசபைதொகுதி வாரியாக பூத்களில் பெற்ற ஓட்டு எண்ணிக்கை பட்டியலை ஆய்வு செய்தபோது தெரியவந்தது. இதை புரிந்து கொள்ளாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தவறான புள்ளிவிபரங்களை கூறி, மற்றவர்களை சிறுமைப்படுத்துகின்றனர்.
வேலுமணி பேசியதென்ன?
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், கோவையில் அ.தி.மு.க., வேட்பாளரை அறிமுகப்படுத்திய கூட்டத்தில், வேலுமணி பேசும்போது, ''பாரதிய ஜனதாவுக்கு 4 சதவீத ஓட்டு இருக்கிறது. அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ம.க.,வுக்கு இங்கு ஓட்டு இருக்கிறதா. அண்ணன் ஜி.கே.வாசன் கட்சிக்கு இங்கே ஓட்டு இருக்கிறதா. அபரிமிதமாக கட்சி வளர்ந்து விட்டதாக சொல்கிறார்கள். இன்னும் 5 சதவீதம்; இல்லை, 6 சதவீதம் போட்டுக் கொள்ளுங்கள். 10 சதவீத ஓட்டு வாங்கினால் வெற்றி பெற முடியுமா. அ.தி.மு..க., உலகத்திலேயே ஏழாவது பெரிய கட்சி; 34 சதவீதம் ஓட்டுள்ள பெரிய கட்சி,'' என்றார்.இத்தேர்தலில் கோவை லோக்சபா தொகுதியில் பா.ஜ., பெற்ற ஓட்டு - 33.07 சதவீதம்; அ.தி.மு.க., பெற்ற ஓட்டு சதவீதம் - 17.37 சதவீதம்.