உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வங்கதேச குழப்பங்களால் இந்தியாவுக்கு பெரும் சவால்

வங்கதேச குழப்பங்களால் இந்தியாவுக்கு பெரும் சவால்

வங்கதேசத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இடைக்கால அரசு அமைப்பது குறித்து பேசப்பட்டு வருகிறது. அங்கு ஏற்பட்டுள்ள குழப்பங்கள், ஆட்சி மாற்றம் ஆகியவை நம் நாட்டில் நேரடியாக பல தாக்கங்களை ஏற்படுத்தும். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், இரு தரப்பு உறவு, தேசிய பாதுகாப்பு என, பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.

நட்பு நாடு

பிரிவினைக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை நம் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தன. பிரிவினையின்போது பாகிஸ்தான் தனி நாடாகச் சென்றது. அப்போது, அதனுடன் ஒட்டிக் கொண்டது தற்போதைய வங்கதேசம்.கிழக்கு பாகிஸ்தான் என்று அது அழைக்கப்பட்டு வந்தது. பாகிஸ்தானுடன் ஏற்பட்ட முட்டல் மோதலில், தனி நாடாக பிரிந்து சென்றது. இதற்காக, 1971ல் நடந்த போரில், கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்தியா பெரும் உதவி புரிந்தது. இதன்படியே, வங்கதேசம் தனி நாடாக உருவானது.நம் நாட்டுடன் ஒட்டியுள்ள வங்கதேசத்துடன், கடந்த 15 ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வந்தது. வங்கதேசம் உருவாவதற்கு காரணமான வங்கத் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான், இந்தியாவுடன் நல்ல நட்பு வைத்திருந்தார். அவரது மகளான ஷேக் ஹசீனா, 2009ல் இருந்து தொடர்ந்து நான்கு முறை பிரதமரானார். தந்தை வழியில் அவரும் இந்தியாவுடனான நட்பைத் தொடர்ந்தார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், இரு தரப்பு உறவு சிறப்பாகவே இருந்தது. ஷேக் ஹசீனாவை தன் சகோதரி என்று அவர் அன்பு பாராட்டினார். இருவருக்கும் இடையேயான அந்த நல்ல நட்பு, பாசப்பிணைப்பு, இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவை வளர்த்து வந்தது. இதனால், வங்கதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பற்றி மத்திய அரசு பெரிதும் கவலைப்படாமல் இருந்தது. தற்போது, ஷேக் ஹசீனா இல்லாத நிலையில், ஆட்சியில் அமரப் போவது யார், நிர்வாகத்தை கவனிக்கப் போவது யார் என்பது மத்திய அரசுக்கு பெரும் சவாலாகும். முக்கியமான, பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி, எப்போதும் இந்தியா எதிர்ப்பாளராகவே இருந்துள்ளது. அத்துடன், அது தீவிர இஸ்லாமிய மத அமைப்பான, ஜமாத் - இ - இஸ்லாமி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிரான மதத் தீவிரவாதத்தை வளர்த்து வந்தது.மேலும், ஒரு காலத்தில் 'உல்பா' போன்ற வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு, வங்கதேசம் தஞ்சமும், ஆதரவும் அளித்து வந்தது. ஷேக் ஹசீனா அதை ஒடுக்கினார்.

சவால்

இதனால், உல்பா போன்ற பிரிவினைவாத அமைப்புகள், வங்கதேசத்தின் மதத் தீவிரவாத அமைப்பான ஜமாத் - இ - இஸ்லாமி ஆகியவை மீண்டும் தலைதுாக்கும் அபாயம் உள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களிலும், வங்கதேச எல்லையிலும் பெரும் பாதுகாப்பு சவால்களை உருவாக்கும்.புதிதாக உருவாக உள்ள இடைக்கால அரசில் யார் யார் இணைய உள்ளனர் என்பதே, இரு தரப்பு உறவுகளை நிச்சயிக்கும் நிலை உருவாகியுள்ளது. அங்கு இந்திய எதிர்ப்பாளர்கள் இருப்பதுடன், மதத் தீவிரவாத அமைப்புகளும் உள்ளன. அதுபோல, சீன ஆதரவாளர்களும் உள்ளனர்.வங்கதேசத்தின் பொருளாதார நிலைமையை வைத்து, அதற்கு உதவிகள் செய்வதுபோல், தன் ஆதிக்கத்தை நடத்துவதற்கு சீனா துடித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு சீனாவுக்கு ஆதரவாக வங்கதேசம் சென்றால், நம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பல முக்கிய துறைகளில் பெரும் சவால்களை ஏற்படுத்தும்.குறிப்பாக, பொருளாதாரத்திலும், வர்த்தக உறவிலும் பாதிப்புகள் ஏற்படலாம். நம் நாட்டின் ஏற்றுமதியில், ஐந்து முக்கிய நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. இதில் பாதிப்பு ஏற்படும் அச்சம் உள்ளது. அதுபோல, இரு நாட்டுக்கும் இடையே உள்ள தாராள வர்த்தக ஒப்பந்தமும் ரத்து செய்யப்படலாம், அதற்கு முட்டுக்கட்டை போடப்படலாம்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ