கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு முன்பிருந்தே, பா.ஜ.,வில் அதிருப்தி தலை துாக்கியது. தலைவர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதற்கு பதில், சொந்த கட்சி தலைவர்களையே கேலி, கிண்டல் செய்து விமர்சித்தனர். சில தலைவர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தனர்.இந்த விஷயத்தில் மேலிடம் தலையிட்டு சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என, தொண்டர்கள், சில மூத்த தலைவர்கள் எச்சரித்தனர். இதை மேலிடம் தீவிரமாக கருதவில்லை. உட்கட்சி பூசல்
அதிருப்தி தலைவர்களின், 'உள்குத்து' வேலையால், சட்டசபை தேர்தலில் பா.ஜ., பலத்த அடி வாங்கியது. கட்சிக்கு அதிக செல்வாக்கு இருந்த தொகுதியிலேயே, பின்னடைவு ஏற்பட்டது. இதற்கு உட்கட்சி பூசலே காரணமாக இருந்தது.லோக்சபா தேர்தல் நேரத்திலும், 22 முதல் 23 தொகுதிகளில் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் கட்சி தலைவர்கள் ஒற்றுமையாக இல்லாததால், 17 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ., வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தல் முடிந்த பின், உட்கட்சி பூசல், நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. விமர்சனம்
சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில், ஆளுங்கட்சியினரை விட, சொந்த கட்சி தலைவர்களையே எம்.எல்.ஏ., எத்னால் அதிகமாக விமர்சித்தார்.இதனால் மாநில தலைவர் விஜயேந்திராவும், எதிர்க்கட்சி தலைவர் அசோக்கும் தர்ம சங்கடத்தில் நெளிந்தனர். இதையே அஸ்திரமாக பயன்படுத்திய காங்கிரசார், பா.ஜ.,வினரை கேலி செய்தனர்.'மூடா' மற்றும் வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை முன் வைத்து, விஜயேந்திரா தலைமையில் பெங்களூரில் இருந்து, மைசூரு வரை பாதயாத்திரையை வெற்றிகரமாக நடத்தினர். பாதயாத்திரையிலும் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட, சில தலைவர்கள் பங்கேற்கவில்லை. மாறாக தனி பாதயாத்திரை நடத்த தயாராகின்றனர். கட்சி சார்பில் நடத்தப்பட்ட பாதயாத்திரை பற்றியும், எத்னால் கிண்டல் செய்து சலசலப்பை ஏற்படுத்தினார்.சமீபத்தில் பெலகாவியில் நடந்த கூட்டத்தில் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி, முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா என, பலர் பங்கேற்றனர். விரைவில் பெங்களூரு புறநகரில், மற்றொரு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இவர்களின் செயல் தொண்டர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பாராமுகம்
கட்சியில் உட்பூசல், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சொந்த கட்சி தலைவர்கள் பற்றியே, கண்டபடி விமர்சிக்கின்றனர். இவ்வளவு நடந்தும், பா.ஜ., மேலிடம் மவுனமாக வேடிக்கை பார்ப்பது, தொண்டர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.மற்ற கட்சிகளை விட, மாறுபட்டது என, பெருமை பேசும் பா.ஜ.,வில் தற்போது வீடு ஒன்று, வாசல் மூன்று என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.வேறு மாநிலங்களில் சிறிய அதிருப்தி எழுந்தாலும், ஓடி சென்று சரி செய்யும் கட்சி மேலிடம், கர்நாடகாவில் இவ்வளவு குழப்பங்கள் இருந்தும், கண்டுகொள்ளாதது ஏன், மேலிடமே இயலாமையில் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. விருப்பம் உள்ளதோ, இல்லையோ விஜயேந்திராவை, மாநில பா.ஜ., தலைவராக மேலிடம் நியமித்துள்ளது. அவரை தலைவராக ஏற்று கொண்டு, கட்சியை வழி நடத்தும்படி தலைவர்களுக்கு உத்தரவிட வேண்டும். சொந்த கட்சியினருக்கு எதிராகவே பகிரங்கமாக பேசுகின்றனர். இவர்களுக்கு குறைந்தபட்சம் நோட்டீசாவது அளித்திருக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் கட்சியின் ஒழுங்கை காப்பாற்ற முடியுமா. வலியுறுத்தல்
பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி, சித்தேஸ்வர், பிரதாப் சிம்ஹா, ஹரிஷ், குமார் பங்காரப்பா தனியாக கூட்டம் நடத்த முற்பட்ட போதே, அதை தடுத்திருக்க வேண்டும். கட்சியில் நடக்கும் அனைத்து நிலவரங்கள், மேலிடத்துக்கு தெரிந்தும் மவுனமாக வேடிக்கை பார்ப்பது சரியல்ல.பா.ஜ., திறமையான எதிர்க்கட்சியாக செயல்படுவதில், தோல்வி அடைந்தது, வலுவிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.விஜயேந்திரா தலைமையில், பாதயாத்திரையை வெற்றிகரமாக நடத்தியதால், கட்சிக்கு ஓரளவு பலம் வந்துள்ளது. இதை கெடுப்பது போன்று, சில தலைவர்களின் பேச்சும், செயலும் உள்ளது. உடனடியாக மேலிடம் தலையிட்டு, அதிருப்தி தலைவர்களின் வாயை அடக்க வேண்டும் என தொண்டர்கள் விருப்பப்படுகின்றனர்.- நமது நிருபர் -