போலி கட்டட அனுமதி ஆவணங்கள் புழக்கம் அதிகரிப்பு: அதிகாரிகள் அச்சம்
சென்னை: உள்ளாட்சி அமைப்புகள் வழங்கியது போன்று, போலி கட்டட அனுமதி மற்றும் பணி நிறைவு சான்றிதழ்கள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. இதனால், வீடு வாங்குவோ ரும், அரசு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்டப்படி கட்டு மான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதில், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.,க்கும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பு
பொது கட்டட விதிகளின்படி வரைபடங்கள் சரிபார்ப்பு பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. உரிமையாளர் சார்பில், பொறியாளர்கள் பதிவு செய்யும் விண்ணப்பங்கள், வரைபடங்கள், 'ஆன்லைன்' முறையிலேயே சரி பார்க்கப்படுகின்றன. இதில், உரிமையாளர், பொறியாளருக்கான தகவல்கள், ஆன்லைன் முறையிலேயே வழங்கப்படுகின்றன. பரிசீலனை தொடர்பான பணிகள் முடிந்த நிலையில், இறுதி ஆணைகள் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், கட்டட அனுமதி தொடர்பான ஆவணங்கள் அடிப்படையில் தான், குடிநீர், கழிவுநீர் வடிகால், மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், விண்ணப்பதாரர் தாக்கல் செய்யும் ஆவணங்களின் உண்மை தன்மையை, இத்துறைகள் சரிபார்க்க வேண்டும். கட்டட அனுமதி ஆவணங்கள், வரைபடங்கள் தொடர்பாக, இந்த துறைகள் பெயரளவுக்கு தான் சரிபார்க்கின்றன. இதில் சமீப காலமாக, போலி ஆவணங்கள் புழங்குவது தெரியவந்துள்ளது. தாம்பரம் உள்ளிட்ட சில மாநகராட்சிகள், நகராட்சிகள் வழங்கியதாக, கட்டட அனுமதி சான்றிதழ் களை அளித்து மின்சாரம், குடிநீர் இணைப்புகள் பெறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. போலீஸ் விசாரணையில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும் உறுதியாகி உள்ளது. மக்கள் அச்சம்
இதுகுறித்து, தமிழக வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: கட்டட அனுமதி, பணி நிறைவு சான்று மட்டுமல்லாது, விதிமீறல் கட்டடங்களுக்கான நோட்டீஸ்களிலும் கூட போலிகள் அதிகரித்துள்ளன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல், போலிகளை வெளியாட்கள் தயாரிப்பது எளிதல்ல. தற்போதைய சூழலில், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், முறையாக கட்டட அனுமதி பெற்று, அதன் அடிப்படையில் வீடு கட்ட விரும்புகின்றன. இவ்வாறு வழங்கப்பட்ட திட்ட அனுமதி, பணி நிறைவு சான்று விபரங்கள், பொது மக்கள் பார்வைக்கு வர வேண்டும். சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி.,யில் இந்த விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. நகராட்சிகள், மாநகராட்சிகள், ஊராட்சிகள் இதை செய்வது இல்லை. அதனால் தான், போலிகள் எளிதாக புழங்கும் நிலை ஏற்படுகிறது. வாழ்நாள் லட்சியமாக வீடு வாங்கும் மக்களுக்கு, இந்த போலி ஆவணங்கள் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன. இந்த விஷயத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
'கியூ ஆர்' குறியீடு
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கட்டட அனுமதி தொடர்பான போலி ஆவணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆன்லைன் முறையில் வழங்கப்படும் அனைத்து கட்டட அனுமதி, பணி நிறைவு சான்றிதழ்களில், 'கியூ ஆர்' குறியீடு சேர்ப்பது போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.