உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விக்கிரவாண்டி களத்தில் கழகங்கள் ஆடும் பாண்டி! அ.தி.மு.க., ஒதுங்கியதால் பதற்றமா?

விக்கிரவாண்டி களத்தில் கழகங்கள் ஆடும் பாண்டி! அ.தி.மு.க., ஒதுங்கியதால் பதற்றமா?

தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:

01 'தான் திருடி பிறரை நம்பா' என்ற பழமொழி போல, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த அக்கட்சி, விக்கிரவாண்டியில் டிபாசிட் போய்விடுமே என்பதால் போட்டியிடவில்லை.02 தமிழக மக்கள் என்றுமே தி.மு.க.,வுடன் தான் இருந்து வருகின்றனர். அந்த ஆதரவை எவரும் தட்டிப்பறிக்க முடியாது. நாற்பதுக்கு நாற்பது வெற்றியே எங்கள் வரலாறை சொல்லும்.03 ஈரோடு தேர்தல் நியாயமாக நடந்து நாங்கள் வெற்றி பெற்றோம். ஜெயலலிதா ஆட்சியில், 1992ல் சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட் தேர்தலில் தான், 'பூத் கேப்ச்சரிங்' எனும் ஓட்டுச்சாவடியை கைப்பற்றும் பெரிய முறைகேடு நடந்தது. 04 தேர்தல் ஆணையம் இருக்கும்போது, பழனிசாமி ஏன் பயப்படுகிறார். தேர்தல் ஆணையம் யார் கையில் இருக்கிறது என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும். தேர்தல் ஆணையம் அதிகார அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக அ.தி.மு.க., குறை சொல்வது, மத்திய அரசை சந்தேகிப்பதாக அர்த்தம். 05 பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு நொண்டி சாக்கை சொல்லிவிட்டு அ.தி.மு.க., தேர்தலை புறக்கணித்துள்ளது. பா.ஜ.,வுடன் ரகசிய டீலிங் வைக்கலாம் என அ.தி.மு.க., முயற்சிக்கிறது. 06 ஜெயலலிதாவுக்கு எதிராக டான்சி வழக்கில் நான் மேல்முறையீடு செய்ததன் காரணமாக, என்னை தோற்கடிக்க அ.தி.மு.க., சதி செய்தது. கடந்த 2021 ஆலந்துார் நகராட்சி தேர்தலில், மொத்தமே 2,000 ஓட்டுகள் உள்ள சாவடியில், 2,300 ஓட்டுகள் பதிவிடப்பட்டன. இப்படி, 20 சாவடிகளில் அதிக ஓட்டுகளை பதிவு செய்து, பூத் கேப்ச்சரிங் செய்தவர்கள் அ.தி.மு.க.,வினர் என்பது வரலாறு. 07 ஒரு கட்சி தேர்தலை புறக்கணிக்கிறது என்றால், அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் ஓட்டு அளிக்கக்கூடாது. கட்சி தலைமையின் உத்தரவை மீறி, அ.தி.மு.க.,வினர் ஓட்டு போட்டால், அவர்களை அ.தி.மு.க.,விலிருந்து நீக்கி விடுவோம் என பழனிசாமி சொல்லத் தயாரா?

அ.தி.மு.க.,வின் ஜெயக்குமார் அளித்த பேட்டி:

01 என்னவோ தி.மு.க., தோல்வியே சந்திக்காத கட்சி போல பேசுகிறார். ஏற்கனவே பல தேர்தல்களில் தோற்ற கட்சி தான் தி.மு.க., அதிலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு 'டிபாசிட்' பறிபோனது. இதை, அரசியல் கட்சியினரும் மறக்கவில்லை; மக்களும் மறக்கவில்லை. 02 கடந்த காலங்களில் தி.மு.க., அடைந்த தோல்விகளை, அக்கட்சியினர் புரட்டிப் பார்க்க வேண்டும். அப்போது புரியும், மக்கள் யார் பக்கம் இருந்துள்ளனர் என்பது. கடந்த 1991 சட்டசபை தேர்தலிலேயே, தி.மு.க., இரண்டு தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. 03 ஈரோடு இடைத்தேர்தல் எப்படி நடத்தப்பட்டது என்பது ஊரறிந்த ரகசியம். ஜனநாயக முறைப்படி ஈரோடு தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், விக்கிரவாண்டியில் போட்டியிட்டிருப்போம். பரங்கிமலை கன்டோன்மென்ட் தேர்தலை, மத்திய அரசு நடத்தியது. அதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 04 ஆதாரத்துடன் முறைகேடுகளை சுட்டிக்காட்டி புகார்கள் அளித்தும் தேர்தல் ஆனையம்் ஈரோட்டில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிலிருந்தே தெரிந்து கொள்லலாம், ஆணையம் யார் பக்கம் என்பதை. 05 புதுக்கோட்டையில் 2012ல் நடந்த இடைத்தேர்தல், 2015ல் சென்னை ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தல் ஆகியவற்றை தி.மு.க., புறக்கணித்தது. இப்போது விக்கிரவாண்டிக்கு புது வியாக்கியானம் பேசும் தி.மு.க., அப்போது எந்த காரணத்தை சொல்லி தேர்தலை புறக்கணித்தனர்? அல்லது யாருக்காக தேர்தலை புறக்கணித்தனர்?06 பூத் கேப்ச்சரிங் என்பதன் பொருளையே தி.மு.க., ஆட்சியில் நடந்த மாநகராட்சி தேர்தல் வழியாகத்தான் மக்கள் புரிந்து கொண்டார்கள். தோல்வி பயத்தால் அதை தொடங்கி வைத்தார்கள். ஆனால், விக்கிரவாண்டி எங்கள் கோட்டை. லோக்சபா தேர்தலில், 7,000 ஓட்டுகள் தான் எங்களுக்கும், தி.மு.க.,வுக்கும் வித்தியாசம். அப்படி இருக்கும்போது, தோல்வி பயத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக எங்களை விமர்சிப்பது கேலிக்கூத்து.07 தொண்டர்களுக்கு தடை போடும் சர்வாதிகார இயக்கம் அல்ல அ.தி.மு.க., ஆனால், காலம் காலமாக இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட தொண்டர்கள் எந்த காலத்திலும் வேறு யாருக்கும் ஓட்டு போட மாட்டார்கள். கட்சி எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்று, தேர்தலை புறக்கணிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 18, 2024 10:03

தமிழக தேர்தல் ஆணைய தலைவர் சத்யபிரதா சாகு அவர்கள் திமுக தேர்தல் அணி தலைவர்.


Velan
ஜூன் 18, 2024 07:19

உண்மையான அ.தி.மு.க. தொண்டன் வேறு கட்சிக்கு வாக்களிக்க மாட்டான என்பது உண்மையே.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ