உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கல்வித்துறையில் தொடர் சர்ச்சை; மகேஷுக்கு துறை மாற்றப்படுமா?

கல்வித்துறையில் தொடர் சர்ச்சை; மகேஷுக்கு துறை மாற்றப்படுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை அசோக் நகர் பள்ளியில், முன் ஜென்மம், மறுஜென்மம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்திய, பரம்பொருள் அறக்கட்டளை சொற்பொழிவாளர் மகா விஷ்ணு, தற்போது போலீஸ் பிடியில் இருக்கிறார்.இன்னொரு பக்கம், இவ்விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், ஆசிரியர் சங்கங்கள் கோபம் அடைந்து உள்ளன.

சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

அமைச்சர்கள் மகேஷ், மனோ தங்கராஜ் உள்ளிட்ட பல அமைச்சர்களோடு மகாவிஷ்ணு கடந்த ஆண்டு தொடர்பில் இருந்திருக்கிறார். அந்த தொடர்பு அடிப்படையில் தான் தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை, தமிழகம் முழுதும் பள்ளிகளில் நடத்த அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். பிரச்னை என்று வந்ததும், தலைமை ஆசிரியர் சரஸ்வதியை இடமாற்றம் செய்து, பலிகடா ஆக்குவதா?பள்ளியில் ஆண்டு முழுதும் நிறைய நிகழ்ச்சிகள், வெளியாட்களை அழைத்து நடத்துகிறோம். அதற்கு முழு இசைவு தெரிவிப்பது, மாவட்ட, மாநில அதிகாரிகள் தான். 'அமைச்சர் விருப்பத்தின்படியே, பள்ளிக்கு இவர் பேச வருகிறார்; அவருக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுங்கள்' என, மேலிடத்தில் இருக்கும் அதிகாரிகள் சொல்வதால், தலைமை ஆசிரியர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்கின்றனர்.அப்படித்தான், மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், அசோக் நகர் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரச்னை என்றதும், பள்ளி தலைமை ஆசிரியரை வேறு ஊருக்குத் துாக்கி அடிக்கின்றனர். அதிகாரிகள் பேச்சை கேட்டு, அவர்கள் உத்தரவுப்படி நடந்ததற்கு இது தண்டனையா?இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இதற்கிடையில், இந்த சர்ச்சை விவகாரம் தொடர்பாக விசாரித்துள்ள உளவுத் துறை அதிகாரிகள், அரசுக்கு இதன் பின்னணி குறித்து அறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

சமீபத்தில், விநாயகர் சதுர்த்தியை மாசு ஏற்படுத்தாத வகையில் கொண்டாடுவது தொடர்பாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, பள்ளிகளுக்கு அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்; இது சர்ச்சையானது. விநாயகர் சதுர்த்தி, ஒரு மதத்தைச் சேர்ந்த ஒரு ஆன்மிக நிகழ்வு; அதற்கு சுற்றறிக்கை அனுப்புவோர், நாளை வேறொரு மதத்தைச் சேர்ந்த ஆன்மிக நிகழ்வுக்கும் இப்படி சுற்றறிக்கை அனுப்பினால் மீண்டும் சர்ச்சை எழும்.அதே போல, கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி ஒருவரை நியமித்தபோது, அவருடைய பின்புலம் விசாரிக்கப்படவில்லை; அதுவும் சர்ச்சையானது.இப்படி பள்ளிக்கல்வித் துறை சார்பான அறிவிப்புகளும், நிகழ்வுகளும் பெரும் சர்ச்சைக்கு காரணமாகின்றன. ஏற்கனவே, ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையெல்லாம் அமைச்சர் மகேஷ் கவனித்து, சரியாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படிப்பட்ட சர்ச்சைகளை தவிர்த்திருக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த விபரங்கள், அமெரிக்காவில் இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டு உள்ளதால், அமைச்சர் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அமைச்சர் உதயநிதியோடு அமைச்சர் மகேஷ் நெருக்கம் என்பதால், பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து பெரிதாக யாரும் கவலை கொள்ளாமல் இருந்தனர். அமைச்சரும் துறை ரீதியான நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்தார். முதல்வரின் செயலர், பள்ளி கல்வித் துறையில் கவனம் செலுத்தியதால், அவரைக் கேட்டே அமைச்சர் செயல்பட்டு வந்தார். பின், செயலர் ஒதுங்கினார். இதைப் பயன்படுத்தி, நிர்வாகத்தில் புரோக்கர்கள் புகுந்தனர். அவர்கள் அமைச்சருக்கு நிர்வாகம் சொல்லிக் கொடுப்பதாகச் சொல்லி, அவரை பல நிலைகளிலும் குழப்பினர். அதனாலேயே, பள்ளிக் கல்வித் துறையில் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுகின்றன.அமைச்சருக்கு துறையை மாற்றிக் கொடுக்கும் முடிவுக்கு முதல்வர் தரப்பினர் வந்துள்ளனர். வரும் 14ம் தேதி, முதல்வர் தமிழகம் திரும்புகிறார். அப்போது, அமைச்சரவை மாற்றம் இருக்கலாம்.இவ்வாறு கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramani Venkatraman
செப் 09, 2024 11:15

இது கற்பனையான விடயம். எய்தவர்களே அம்பை உடைப்பரா???


Indian
செப் 09, 2024 09:53

யார் அந்த உளவுத் துறை அதிகாரி?


V GOPALAN
செப் 09, 2024 08:06

உதயநிதி உத்தரவு இல்லாமல் மகேஷ் எதுவும் செய்வதில்லை


kulandai kannan
செப் 08, 2024 20:28

என்ன நடந்தாலும் உதயநிதி, மகேஷ் பதவிகளுக்கு ஆபத்து வராது.


kulandai kannan
செப் 08, 2024 17:37

சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்.


எஸ் எஸ்
செப் 08, 2024 15:57

இருப்பதிலேயே மோசமான செயல்பாடுள்ள மந்திரிகள் அன்பில் மகேஷும் சேகர் பாபுவும்.


maran 1964
செப் 08, 2024 15:16

அதிகாரிகளை நிர்வகிக்க தெரியாதவர். பள்ளியில் ஆய்வு போட்டோ வெளியிடுபவர் எங்கே தைரியம் இருந்தால் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார அலுவலகத்தை வந்து நடவடிக்கை எடு. மக்களைத் தேடி மருத்துவம், முதியோர் ஆன்மீகப் பயணம். ஆனால் இவர் கல்வித் துறையில் பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணி ஓய்வு பெற்று 4 மாதம் ஆகிறது. இன்னும் 3 வருட பணிப்பதிவேடு பதியாமல் பாக்கி உள்ளது. நிர்வாகம் தோல்வி


siva raman
செப் 08, 2024 12:28

தயவு செய்து பதவியை இராஜினாமா செய்ய சொல்லுங்கள் 2013 டெட் தேர்வர்களின் வாழ்க்கையை கெடுத்த மகா பாவி


அப்பாவி
செப் 08, 2024 09:13

மாற்றம். கல்வித்துறைக்கு நல்லது. ஆனா, சரியான ஆளுங்க யாருமே இல்லாததுதான் பரிதாபம்.


கண்ணன்
செப் 08, 2024 06:13

முனையான படிப்பறிவுள்ளவர்களைக் கல்லித் துறையில் அமர்த்த வேண்டும்


புதிய வீடியோ