உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாநகராட்சி உதவி கமிஷனர் வேலை: கூவி கூவி விற்பனை! புதிய பணிகள் விதிகளுக்கு முரணாக தாசில்தார்கள் நியமனம்

மாநகராட்சி உதவி கமிஷனர் வேலை: கூவி கூவி விற்பனை! புதிய பணிகள் விதிகளுக்கு முரணாக தாசில்தார்கள் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாநகராட்சிகளில் உதவி கமிஷனர்களாக, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளையே நியமிக்க வேண்டுமென்ற புதிய பணி விதிகளை மீறி, மீண்டும் மீண்டும் தாசில்தார்களை நியமிப்பது தொடர்ந்து வருகிறது.தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில், ஏராளமான உதவி கமிஷனர் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் தகுதியான அதிகாரிகள் இல்லாதபட்சத்தில், வருவாய்த்துறையிலிருந்து துணை ஆட்சியர் அந்தஸ்திலுள்ள தாசில்தார் போன்ற அதிகாரிகளை, அயல் பணியில் நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.ஆனால் 2023ல், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் தொடர்பாக, புதிய அரசாணை (எண்:152) வெளியிடப்பட்டது. அதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையிலுள்ள அலுவலர்களையே, உதவி கமிஷனர்களாக நியமிக்க வேண்டுமென்று தெளிவுபடுத்தப்பட்டு இருந்தது. இதற்குத் தகுதியான நிலையில், இதே துறையில் ஏராளமான அலுவலர்களும் உள்ளனர்.

பரிந்துரையின் அடிப்படையில்...

தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்கத்தினரும், வருவாய்த்துறையிலிருந்து மாநகராட்சி நிர்வாகங்களில் உதவி கமிஷனர்களை நியமிக்கக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இருப்பினும், பணத்தை வாங்கிக் கொண்டு அல்லது பரிந்துரையின் அடிப்படையில், வருவாய்த்துறையில் இருந்து, மாநகராட்சிகளில் உதவி கமிஷனர்களை பணி மாறுதல் செய்வது தொடர்ந்து வருகிறது.கடந்த மாதத்தில், திருநெல்வேலி மாநகராட்சியின் தச்சநல்லூர் மண்டல உதவி கமிஷனராக, தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் என்பவர் நியமிக்கப்பட்டார்.தற்போது, திருச்சியைச் சேர்ந்த தாசில்தார் முத்துசாமி என்பவரை, கோவை மாநகராட்சியில் கிழக்கு மண்டல உதவி கமிஷனராக பணி மாறுதல் செய்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த மண்டலத்தில், இவருக்கு முன்பாகவும், வருவாய்த்துறை தாசில்தார்களே பல ஆண்டுகளாக இப்பணியில் இருந்துள்ளனர். மாநகராட்சியில் உதவி கமிஷனர்களாக நியமிப்பதற்கான அரசாணையை, வருவாய்த்துறை வெளியிடுகிறது.2023ம் ஆண்டு, புதிய விதிகள் வெளியான பின்பும் இது தொடர்வது, மாநகராட்சி அலுவலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பாதிக்க மட்டும் தெரியும்

இவ்வாறு வேறு துறைகளிலிருந்து வரும் அதிகாரிகளுக்கு, மாநகராட்சி விதிமுறைகள் பற்றி சரியாகத் தெரிவதில்லை என்றும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாக இந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்குகின்றனர் என்றும், மாநகராட்சி அலுவலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கேற்ப, வருவாய்த்துறையிலிருந்து வரும் அதிகாரிகள்தான், அதிக புகார்களுக்கு உள்ளாகின்றனர்.இப்போது திருச்சியில், அமைச்சர் நேருவின் பரிந்துரையில், அவரது துறையில் மீண்டும் வருவாய்த்துறை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இப்படி நியமிக்கக்கூடாது என்று புதிய பணிகள் விதிகளில் சொல்லப்படவில்லை என்று, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் தலைவர் சுப்ரமணியன், இது தொடர்பாக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், 'இதுபோன்ற சட்டவிரோத நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்; தகுதியான மாநகராட்சிப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்