உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பெய்யென பெய்யும் மழையால் ததும்பும் அணைகள்: உபரிநீர் வெளியேற்றத்தால் ஆற்றில் வெள்ளம்

பெய்யென பெய்யும் மழையால் ததும்பும் அணைகள்: உபரிநீர் வெளியேற்றத்தால் ஆற்றில் வெள்ளம்

மேற்கு தொடர்ச்சிமலையில் இடைவிடாது பெய்யும் கனமழையால், சோலையாறு, ஆழியாறு அணைகள் நிரம்பியுள்ளன. அணைக்கு அபரிமிதமாக நீர்வரத்து இருந்ததால், அணை பாதுகாப்பு கருதி, மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் வெறியேற்றப்படுகிறது.மேற்கு தொடர்ச்சிமலையில், வால்பாறை, சோலையாறு, நீராறு, பரம்பிக்குளம் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக கனமழை பெய்கிறது. இதனால், சோலையாறு அணை கடந்த, 19ம் தேதி நிரம்பியது. இதையடுத்து, உபரிநீர் முழுவதும் சேடல்டேம் வழியாக, பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டது.இந்நிலையில், வால்பாறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், இரு நாட்களாக இடைவிடாது கனமழை பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான மேல்நீராறு, கீழ்நீராறு, இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சி, கூழாங்கல்ஆறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

விடுமுறை

வால்பாறையில் பெய்யும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. எஸ்டேட்களில் தேயிலை பறிப்பு பணிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சோலையாறு

பி.ஏ.பி., திட்ட அணைகளில் முக்கிய அணையான, சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 164.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் வழியாக, வினாடிக்கு, 7,040 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் ஆற்றின் வழியாக, கேரளா வனப்பகுதிகள் வழியாக சென்றது.

ஆழியாறு

பொள்ளாச்சி அருகேயுள்ள, ஆழியாறு அணையின் மொத்த உயரமான, 120 அடியில் கடந்த, கடந்த, 26ம் தேதி காலை, 118.65 அடியாக அணை நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து, 11 மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது.நேற்றுமுன்தினம், 119.20 அடியாக உயர்ந்ததையடுத்து, வினாடிக்கு, 2,700 கனஅடி நீர்வரத்து இருந்தது. மதகுகள் வழியாக, 1,450 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.நேற்று காலை நிலரவப்படி ஆழியாறு அணை நீர்மட்டம், 119.70 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 5,000 கனஅடி வரை இருந்தது. இதையடுத்து, மதகுகள் மற்றும் கால்வாய் வழியாக வினாடிக்கு, 6,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

பரம்பிக்குளம்

பரம்பிக்குளம் அணைக்கு, சோலையாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு, 11,702 கனஅடி தண்ணீர் வரத்து இருந்ததால், அணை மொத்த உயரமான, 72 அடியில், 53.88 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று ஒரே நாளில், 4.85 அடி நீர்மட்டம் உயர்ந்தது. நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேல்நீராறில் 23.9 செ.மீ.,

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,): வால்பாறை - 194, சோலையாறு - 185, பரம்பிக்குளம் - 230, ஆழியாறு - 61, மேல்நீராறு - 239, கீழ்நீராறு - 232, காடம்பாறை - 55, மேல்ஆழியாறு - 53, சர்க்கார்பதி- 106, வேட்டைக்காரன்புதுார் - 63, மணக்கடவு - 115, துணக்கடவு - 166, பெருவாரிப்பள்ளம் - 180, நவமலை - 35, பொள்ளாச்சி - 93 என்ற அளவில் மழை பெய்தது.

பாசன விவசாயிகள் ஆதங்கம்

சோலையாறு அணை நிரம்பியதையடுத்து, மதகுகள் வழியாக கேரளாவுக்கு தண்ணீர் செல்கிறது. அணைகள் நிரம்பியுள்ளதை காண, பி.ஏ.பி., பாசன விவசாயிகள் பல குழுக்களாக சோலையாறு வந்தனர்.இதில், செஞ்சேரிமலை பகுதியை சேர்ந்த விவசாயிகள், சோலையாறு மதகு பகுதி பாலத்தில், திடீரென தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.அதன்பின், அவர்கள் வெளியிட்ட வீடியோ பதிவில், 'சோலையாறு, ஆழியாறு அணைகள் நிரம்பி விட்டன. பரம்பிக்குளம் அணை நிரம்பி வருகிறது. ஆனால், காண்டூர் கால்வாய் பணிகளை நிறைவு செய்யாததால், திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு செல்ல முடியவில்லை.செஞ்சேரிமலை, பல்லடம் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில், அணையில் இருந்து உபரிநீர் வீணாவது வேதனையளிக்கிறது. மழைநீர் வீணாகாமல் பயன்படுத்த, அதிகாரிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்,' என, ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாசன விவசாயிகள் ஆதங்கம்

சோலையாறு அணை நிரம்பியதையடுத்து, மதகுகள் வழியாக கேரளாவுக்கு தண்ணீர் செல்கிறது. அணைகள் நிரம்பியுள்ளதை காண, பி.ஏ.பி., பாசன விவசாயிகள் பல குழுக்களாக சோலையாறு வந்தனர்.இதில், செஞ்சேரிமலை பகுதியை சேர்ந்த விவசாயிகள், சோலையாறு மதகு பகுதி பாலத்தில், திடீரென தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.அதன்பின், அவர்கள் வெளியிட்ட வீடியோ பதிவில், 'சோலையாறு, ஆழியாறு அணைகள் நிரம்பி விட்டன. பரம்பிக்குளம் அணை நிரம்பி வருகிறது. ஆனால், காண்டூர் கால்வாய் பணிகளை நிறைவு செய்யாததால், திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு செல்ல முடியவில்லை.செஞ்சேரிமலை, பல்லடம் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில், அணையில் இருந்து உபரிநீர் வீணாவது வேதனையளிக்கிறது. மழைநீர் வீணாகாமல் பயன்படுத்த, அதிகாரிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்,' என, ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.- நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை