| ADDED : ஜூலை 28, 2024 12:18 AM
புதுடில்லி: இங்கு தேர்தல் நடைபெறும் போது நம்ம ஊர் அரசியல்வாதிகள், மதத் தலைவர்களை சந்திப்பது வழக்கம். காரணம், இந்த மதத் தலைவர்களின் ஆசி கிடைத்தால், அவர்களின் ஆதரவாளர்களின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என்கிற நப்பாசை தான். இந்த வழக்கம் அமெரிக்காவையும் தொற்றிக் கொண்டுவிட்டது. இது தொடர்பாக டில்லி அரசியல் அரங்கில் ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பாக கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்பும் மோதவுள்ளனர். குடியரசு கட்சி சார்பாக டிரம்பிற்கு உதவியாக துணை அதிபர் வேட்பாளராக ஜேம்ஸ் டேவிட் வென்சி களம் இறங்கியுள்ளார். இவரது மனைவி உஷா சிலுக்குரி ஒரு தீவிர ஹிந்துத்வவாதி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷாவிற்கு ஆந்திரா தான் பூர்வீகம்.ஆன்மிகவாதியும், சமூக சேவையாள ருமான மாதா அமிர்தானந்தமயி கடந்த வாரம் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் அல்புகர்கி என்கிற ஊரில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டு பக்தர்கள் இவரை அரவணைக்கும் அன்னை என அழைக்கின்றனர். காரணம், பக்தர்களை கட்டிப்பிடித்து ஆசி வழங்குவது இவருடைய பாணி. இங்கு திடீரென பக்தர்கள் கூட்டத்தில் சலசலப்பு. அம்மாவின் ஆசியைப் பெற வந்தவர், துணை அதிபர் வேட்பாளரின் மனைவி உஷா. பக்தர்கள் அனைவருக்கும் ஆச்சர்யம். அம்மாவை சந்தித்து அரவணைத்து ஆசி பெற்றார் உஷா.தேர்தலில், தன் கணவரும், டிரம்பும் வெற்றி பெற அம்மாவிடம் ஆசி வாங்கிக் கொண்டாராம். இவருடைய கணவர் கிறிஸ்தவராக இருந்தும், இவர் மதம் மாறவில்லை. ஹிந்து முறைப்படி கோவில், பூஜை, பண்டிகைகள் என பிசியாக இருப்பவர். அம்மாவின் ஆசி, உஷாவின் கணவருக்கும், டொனால்டு டிரம்பிற்கும் எந்த அளவிற்கு உதவும் என தெரியவில்லை.