லஞ்ச கவுன்சிலர்கள், அதிகாரிகள் விபரம் சேகரிக்கிறது உளவுத்துறை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைத்துவித பணிகளுக்கும் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதை கண்காணிக்கும்படி, உளவுத்துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தவறு உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.'சென்னை மாநகராட்சியின் இலவச மயான பூமிகளில், இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் அல்லது தகனம் செய்ய, ஒப்பந்ததாரர்கள் 10,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை லஞ்சம் பெறுகின்றனர்' என, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.இதில், ஒருவர் உயிரிழந்தால், பல்வேறு நிலையில் 60,000 ரூபாய் வரை லஞ்சத்திற்கே கொடுக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான பணிகளை,'பினாமி'கள் வாயிலாக, கவுன்சிலர்கள் ஒப்பந்தம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து,'கட்டப்பஞ்சாயத்து, மக்களின் சேவைகளுக்கு லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தார்.இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் குறித்த விபரங்களை சேகரித்து அறிக்கையாக அளிக்கும்படி, உளவுத்துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.அதில், எந்தெந்த பணிகளுக்கு லஞ்சம் பெறுகின்றனர்; கவுன்சிலர்கள் 'பினாமி'கள் பெயரில் எடுத்துள்ள ஒப்பந்த பணிகள்; விளையாட்டு திடல்கள்; பூங்காக்கள் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே, உளவுத்துறை போலீசார் அளித்த பட்டியலின்படி, ஐந்து கவுன்சிலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு, அவர்களிடம் விளக்கம் பெறப்பட்டுள்ளது.அதேநேரம், பெரும்பாலான கவுன்சிலர்கள் கட்டட வரைபடம், பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு, சாலை வெட்டு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, குறைந்தது 10,000 முதல் அதிகபட்சமாக லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக தகவல் வந்துள்ளது.அத்துடன் சில கவுன்சிலர்கள், தங்களது 'பினாமி' பெயரில் மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து, முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, விளையாட்டு திடல்களை ஆக்கிரமித்து, அங்கு விளையாட்டு வீரர்களிடம் 2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை பெறுகின்றனர்.இதுபோன்ற தொடர் புகார்கள் வருகின்றன. அத்துடன், சமீபத்தில் 'தினமலர்' நாளிதழில் வெளியான, உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, 60,000 ரூபாய் லஞ்சம் பெறுகின்றனர் என்ற செய்தி, முதல்வர் வரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே, சென்னை மாநகராட்சியில் லஞ்சம் பெறும் கவுன்சிலர்கள், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.உளவுத்துறை அறிக்கையைத் தொடர்ந்து, தவறு செய்யும் கவுன்சிலர்கள் தகுதி நீக்கமும், அதிகாரிகள் மீது துறை வாரியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள்கூறினர்.- நமது நிருபர் -