சென்னை: இந்திய ரயில்வேயில் தினமும் இயக்கப்படும், 13,000க்கும் மேற்பட்ட ரயில்களில், சராசரியாக, 2.50 கோடி பேர் பயணிக்கின்றனர். மக்களிடம் தற்போது இணையதள வசதியுடன், மொபைல்போன் பயன்பாடும் அதிகரித்துள்ள தால், 84 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் தான் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.பஸ், விமான டிக்கெட், உணவு ஆர்டர் செய்வது, வீல் சேர், பயணியர் காத்திருப்பு அறை, பேட்டரி வாகனம் முன்பதிவு உட்பட பல்வேறு கூடுதல் வசதியுடன், இந்த இணையதளம் இயங்கி வருகிறது. கட்டணம் பிடித்தம்
ஆனால், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டை, வேறொரு தேதிக்கு மாற்றும் வசதி இல்லை. அதனால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக கட்டணமும் பிடித்தம் செய்யப்படுகிறது.இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: பயணியரின் தேவைக்கு ஏற்ப, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தவிர்க்க முடியாத சூழலில், பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்து விட்டு, பின் புதிதாக டிக்கெட் பதிவு செய்ய வேண்டியுள்ளது.ஏற்கனவே இருக்கும் டிக்கெட்டை ரத்து செய்யும் போது, 'வெயிட்டிங் லிஸ்ட்' டிக்கெட்டில் ஒரு பயணிக்கு, 60 ரூபாய்; உறுதி செய்யப்பட்ட டிக்கெட் என்றால் பயணிக்கு, 120 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. மாற்றும் வசதி
இதனால், பயணியருக்கு கூடுதல் செலவாகிறது. எனவே, பயணத்தை வேறொரு தேதிக்கு, ஆன்லைனில் மாற்றும் வசதியை ரயில்வே கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பயணியரின் கோரிக்கை குறித்து, ரயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இந்த இணையதளத்தை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தும் போது, பயணியரின் கோரிக்கை பற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.