டில்லியில் நேற்று பலத்த மழை புரட்டி போட்ட நிலையில், புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. மேற்கூரையில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள் பசை விலகியதால், இந்த கசிவு ஏற்பட்டதாக லோக்சபா செயலகம் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளம்
புதிய பார்லிமென்ட் வளாகம், கடந்தாண்டு மே மாதம் திறக்கப்பட்டு, செப்டம்பரில் இருந்து சபை நடவடிக்கைகள் அங்கு நடந்து வருகின்றன. பார்லி மென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது.டில்லியில் நேற்று பலத்த மழை பெய்த நிலையில், பார்லிமென்டில், மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, காங்.,கைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:வெளியே வினாத்தாள் கசிவு நடக்கிறது. பார்லிமென்டுக்குள் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக எம்.பி.,க்களின் சிறப்பு குழு அமைத்து, கட்டடம் முழுதும் ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக, ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு மனு கொடுத்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:பழைய பார்லிமென்ட் கட்டடம், இதைவிட சிறப்பாகவே உள்ளது. முன்னாள் எம்.பி.,க்கள் கூட பார்லிமென்டுக்கு வந்து சந்திக்க வாய்ப்பு இருந்தது. மழைநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, பழைய பார்லிமென்ட் வளாகத்தையே பயன்படுத்தலாம். கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து, மழைநீர் கசிவது என்பது, மத்திய அரசின் திட்டமிட்ட வடிவமைப்பாக இருக்குமோ.இவ்வாறு அவர் கூறினார்.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சமீபத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டதை குறிப்பிடும் வகையில் அவர் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், இது குறித்து லோக்சபா செயலர் கூறியதாவது: புதிதாக கட்டப்பட்டுள்ள பார்லிமென்ட் கட்டடத்தில் உள்ள லாபி பகுதியின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்து ஒழுகுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கண்ணாடி
புதிய பார்லிமென்ட் கட்டடத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளன. புதிய பார்லி., கட்டடத்தை, பசுமை வளாகமாக உருவாக்க திட்டமிடப்பட்டது. அதற்காக கண்ணாடியாலான மேற்கூரைகள் அமைக்கப்பட்டன.இந்த கூரைகளில் ஒன்று, லாபி பகுதியிலும் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்படுவதால், இயற்கையான சூரிய வெளிச்சம் அந்த பகுதி முழுவதும் கிடைக்கும். ஆனால் கனமழை காரணமாக புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் லாபி பகுதியில் மேற்கூரையில் அமைக்கப்பட்ட கண்ணாடியை, மேற்கூரையோடு சேர்த்து ஒட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருளிலான பசை, சற்றே விலகிவிட்டது.இதன் காரணமாக சிறிய அளவிலான தண்ணீர் கசிவு லாபி பகுதிக்குள் ஏற்பட்டது.அது, உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு உரிய நேரத்திற்குள் சரி செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.- -நமது டில்லி நிருபர் -