மேட்டூர் அணை நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளதால், டெல்டாவில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. அதே நேரம் காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி, முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் தராமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மொத்த நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., நீர்மட்டம், 120 அடி. அணையில் திறக்கப்படும் நீரால் திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட, 13 மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 89 ஆண்டுகள்
ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன், 12ல் சாகுபடிக்கு நீர் திறக்கப்படும். அப்போது அணையில் குறைந்தபட்ச நீர்மட்டம், 90 அடிக்கு மேலும், நீர் இருப்பு, 52 டி.எம்.சி.,க்கு கூடுதலாகவும் இருக்க வேண்டும்.அணை கட்டி, 89 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை குறித்தபடி ஜூன் 12ல், 19 ஆண்டுகள், ஜூன் 12க்கு பின் தாமதமாக, 60 ஆண்டுகள், ஜூன் 12க்கு முன்னதாக, 9 ஆண்டுகள் பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நேற்று அணை நீர்மட்டம், 52.70 அடி, நீர் இருப்பு, 19.55 டி.எம்.சி.,யாக இருந்தது. தமிழகத்தில், 13 மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு நீர்திறக்க இன்னமும், 37.30 அடி, நீர் இருப்பு, 32.45 டி.எம்.சி., நீர் தேவை. கடந்த, 2011ல் ஜூன், 12க்கு முன்னதாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. அதன் பின் பருவமழை கைகொடுக்காததால் தாமதமாகவே நீர் திறக்கப்பட்டது.கடந்த, 2021, 2023ல் குறித்தபடி ஜூன் 12ல் முதல்வர் ஸ்டாலின் பாசனத்துக்கு நீரை திறந்து வைத்தார். கடந்த, 2022ல் மே 22ல் அணை நீர்மட்டம், 117.76 அடியாக இருந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் ஜூன், 12க்கு முன்னதாக மே, 22ல் பாசனத்துக்கு நீரை திறந்து வைத்தார். கடந்த, 2023ல், ஜூன் 12ல் மேட்டூர் அணை நீர்மட்டம், 103.35 அடியாகவும், நீர் இருப்பு, 69.25 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் குறித்தபடி பாசனத்துக்கு நீர்திறந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடந்தது.இதில், 4.5 லட்சம் ஏக்கரில், கிணற்று பாசனத்தை நம்பியும், காவிரி கரையோர பகுதிகளில் உள்ள, 3 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை பயிர் அறுவடை செய்யப்பட்டன. கடந்த ஆண்டு குறுவைக்கு நீர்திறந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய துவங்கியது. கடந்த ஆண்டு அக்டோபர், 9ல் மேட்டூர் அணை நீர்மட்டம், 31.30 அடியாக சரிந்தது.கடந்த ஆக., 27ல், 10,000 கன அடியாக இருந்த நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த அக்., 10ல், 500 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில், 12 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில், மேட்டூர் அணை நீர் இருப்பு குறைவாக இருப்பதால் அணையில் இருந்து குறித்தபடி வரும் ஜூன், 12ல் நீர் திறக்க வாய்ப்பில்லை. அதனால், மூன்று ஆண்டுகளுக்கு பின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருண பகவான் கருணை காட்டினால் மட்டுமே தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. கர்நாடகா நீர் இருப்பு
கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதில், கே.ஆர்.எஸ்., அணை மொத்த நீர் இருப்பு, 49.5 டி.எம்.சி., கபினி நீர் இருப்பு, 19.5 டி.எம்.சி.,யாகும்.தற்போதைய நிலவரப்படி கே.ஆர்.எஸ்., அணையில், 11 டி.எம்.சி., கபினியில், 7 டி.எம்.சி., நீர் மட்டுமே இருப்பு உள்ளது. கர்நாடகா, கேரளா நீர்பிடிப்பு பகுதியில் ஜூன் இறுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால், இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். இதில், கே.ஆர்.எஸ்., அணை நிரம்ப, 38.5 டி.எம்.சி., கபினிக்கு, 12.5 டி.எம்.சி., நீர் தேவை. இரு அணைகளும் நிரம்பும் பட்சத்தில் மட்டுமே உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்படும். நடப்பாண்டு வெயில் அதிகமாக இருப்பதால் காவிரியாறும் வறண்டு போன நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைக்க காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.கர்நாடகா மாநில துணை முதல்வர் சிவக்குமார், 'காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது' என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால், தமிழக அரசு சார்பில் அமைச்சர் துரைமுருகன், 'கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்ததோடு முடித்து கொண்டார். விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை என்ற போதும் கூட முதல்வர் ஸ்டாலின், கர்நாடகா அரசுக்கு தண்ணீர் திறக்க கோரி தொடர்ந்து அழுத்தம் தராதது, டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.உச்ச நீதிமன்றத்தில்வழக்கு போடுங்கள்உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா அரசு, 197 டி.எம்.சி., தண்ணீரை தரவில்லை. நாள்தோறும் நீர் பங்கீட்டையும் அமல்படுத்தவில்லை. தமிழகத்தில் தி.மு.க., அரசுக்கும், கூட்டணி கட்சியான காங்., கட்சிக்கும், தமிழக விவசாயிகள் மீது அக்கறை இல்லை. குறுவை சாகுபடிக்காக ஜூன், 12ல் தண்ணீர் திறக்கும் வகையில், தமிழக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தகோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அதை செய்ய தயங்குகிறார். காவிரியில் தண்ணீர் வராத பட்சத்தில், டெல்டாவில் நடப்பாண்டு குறுவை சாகுபடி பாதிக்கும்.- பி.அய்யாக்கண்ணுதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்3.60 லட்சம் ஏக்கர்சாகுபடி பாதிக்கும்குறுவை சாகுபடி பணிகள் குறித்து அரசு உடனே வேளாண், எரிசக்தி, உணவு, கூட்டுறவு துறை செயலர்கள் முன்னிலையில் தலைமை செயலர் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி, விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும். இந்தாண்டு நிலவும் தண்ணீர் பிரச்னையால் பருவமழை கைக்கொடுக்கும் என சாகுபடியை துவங்கினால், 3.60 லட்சம் ஏக்கர் சாகுபடி பாதிக்கப்படும். விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் பொருளாதாரம் பாதிக்கப்படும்.- சுவாமிமலை விமல்நாதன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர்நிலத்தை தயார்செய்ய முடியவில்லைகடந்தாண்டு குளம், குட்டைகளில் இருந்த தண்ணீரை வைத்து டெல்டாவில் குறுவை, சம்பா பயிர்கள் காப்பாற்றப்பட்டன. தற்போது, குளம், குட்டையிலும் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீரும் குறைந்து விட்டதால், பம்பு செட் வாயிலாக தண்ணீரை எடுத்து விவசாயம் செய்ய முடியாது. கோடை மழையும் பெய்யாத பட்சத்தில், டெல்டா மாவட்டங்களில் நெல் விதைப்புக்காக, நிலத்தை கூட தயார் செய்ய முடியவில்லை.- பி.ஆர்.பாண்டியன்,தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
101 டி.எம்.சி., நிலுவை
உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி கர்நாடகா, ஆண்டுதோறும் ஜூன் முதல் மே வரை தமிழகத்துக்கு, 177.25 டி.எம்.சி., வழங்க வேண்டும். கடந்த, 2023ல் ஜூனில், 2.83 டி.எம்.சி., ஜூலையில், 8.74, ஆகஸ்டில், 19.90, செப்டம்பரில், 13.58, அக்டோபரில், 12.84, நவம்பரில், 10.65, டிசம்பரில், 4, பின் 2024 ஜனவரியில், 1.4, பிப்ரவரியில், 0.6, மார்ச்சில், 0.94, ஏப்ரலில், 0.43 என இதுவரை, 75.91 டி.எம்.சி., நீர் மட்டுமே அம்மாநிலம் வழங்கியுள்ளது. இன்னும், 101.34 டி.எம்.சி., நீர் நிலுவை வைத்துள்ளது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் இருப்பு குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாகக் கூறி, தண்ணீர் தர முடியாது என கர்நாடகா முரண்டு பிடிக்கிறது.- நமது நிருபர் குழு -