நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பென்னை மற்றும் முதுகுழி பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்கள், எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில், தோடர், கோத்தர், பணியர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 2021-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தில், 27 ஆயிரத்து 32 பழங்குடி மக்கள் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது. அதில், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக, மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியபோதும், பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் இதுவரை மேம்படவில்லை. ரூ. 80 கோடி ஒதுக்கீடு
கடந்த ஆண்டு பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராம திட்டத்துக்கு, 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. குடிநீர், சாலை, இணையதள வசதி, சுகாதாரம், தேசிய ஊட்டச்சத்து மற்றும் கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சி, உயர்கல்வி, குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக செலவிட அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலான பழங்குடியினர் இன்னும் அடிப்படை வசதிகளை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள பென்னை மற்றும் முதுகுழி கிராமங்களில், 30 குடும்பங்களாக வசிக்கும் பணியர் மற்றும் காட்டு நாயக்கர் இன்றும் குடிசை வீடுகளில்தான் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. ஒற்றையடி பாதையில் விலங்குகள் நடமாடும் வனத்தில் நாள்தோறும் சென்று வருகின்றனர். அவசர நேரங்களில் முதியோர், நோயாளிகளை தொட்டில் கட்டி துாக்கி செல்ல வேண்டிய அவலம் உள்ளது. இவர்களின் குடியிருப்பின் மேற்கூரைகள், புல் வேய்ந்த நிலையில் அபாய நிலையில் காணப்படுகின்றன.மழை பெய்தால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து விடுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மாற்றிட திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.
தேர்தலுக்குப்பின் தலைமறைவு
காட்டுநாயக்கர் சமுதாய சங்க தலைவர் சந்திரன் கூறுகையில், ''நீலகிரியில் குறைந்த அளவில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கான நிதி முறையாக செலவு செய்வதில்லை. இதற்கு இந்த கிராமம் ஓர் உதாரணம். இது போன்ற பல கிராமங்கள் நீலகிரியில் அதிகளவில் உள்ளன. அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் வருவதுடன் காணாமல் போய்விடுகின்றனர். அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. வனத்தில் வாழும் எங்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் அல்லது மாற்றிட திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார். - நமது நிருபர்-