பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில அளவில், 28 அல்லது 29வது இடத்தை பிடித்து வந்த அரியலுார் மாவட்டம், இம்முறை 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தையும், பிளஸ் 2 தேர்வில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. கல்வித்துறை வட்டாரங்களில் ஆச்சரியத்துடன் பார்க்கப்படும், இதன் பின்னணியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இருப்பதாக கூறப்படுகிறது. 'தேர்வை வெல்வோம்' என்ற தலைப்பில், மெல்ல கற்போருக்கான கையேடு ஒன்றை, தரமான கல்வியாளர்களை வைத்து தயார் செய்து, அதை அரசு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் வினியோகித்துள்ளார்.அதுதான், அரியலுார் மாவட்டத்தின் சாதனைக்கு காரணம் எனகின்றனர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள். இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:பொதுத்தேர்வு முடிவுகளில் அரியலுார் மாவட்டம், தமிழகம் அளவில் பின் தங்கி இருந்தது கவலை அளித்தது. இதுகுறித்து கல்வியாளர்களிடம் பேசினேன். அவர்கள் யோசனையின்படி, 'தேர்வை வெல்வோம்' என்ற கையேடு தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.பத்தாம் வகுப்பு கையேட்டை, தமிழக ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் சாமிநாதனும், பிளஸ் 1, பிளஸ் 2 கையேட்டை, 'டுபிட்கோ' நிறுவன பொது மேலாளர் முத்து பாண்டியனும் தயாரித்து கொடுத்தனர். கடந்த ஜனவரி முதல் வாரத்தில், அரியலுார் மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு அரசு பள்ளி மாணவர்களுக்கும், அந்த கையேட்டை நானே நேரில் சென்று வழங்கினேன். சில நாட்களிலேயே, கையேடு சிறப்பாக இருப்பதாக, மாணவர்கள் போன் வாயிலாக கூறினர்.எதிர்பார்த்தது போல, தேர்வு முடிவுகள் சிறப்பாக வந்துள்ளன. மாணவர்களுக்கு கையேடு வசதியாக இருப்பதால், கல்வியாளர்கள் விருப்பப்படி முதல்வர் ஸ்டாலினிடம் கூறி, அடுத்த ஆண்டு மாநிலம் முழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த கையேட்டை வழங்கலாம் என்ற யோசனை வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.-நமது நிருபர்-