உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புதிய மருத்துவ கல்லுாரிகள் துவங்க தமிழக அரசு விண்ணப்பிக்காதது ஏன்?

புதிய மருத்துவ கல்லுாரிகள் துவங்க தமிழக அரசு விண்ணப்பிக்காதது ஏன்?

சென்னை:'தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய கட்டுப்பாடுகளால் தான், ஆறு மருத்துவக் கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை' என, மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள், 34 சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்துார், பெரம்பலுார், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் தலா ஒரு கல்லுாரி துவங்க அனுமதி கேட்டு, மத்திய அரசிடம், 2021 முதல் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.ஆனால், அனுமதி கோரி தமிழக அரசு சார்பில், இதுவரை என்.எம்.சி., எனப்படும், தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'புதிய மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.இந்நிலையில், 'என்.எம்.சி.,யின் புதிய கட்டுப்பாடுகளால் தான், புதிய மருத்துவக் கல்லுாரிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை' என, மக்கள் நல்வாழ்வு துறை காரணம் கூறுகிறது.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கனவே போதிய அளவில் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதனால், மற்ற மாநிலங்களில் மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, என்.எம்.சி., ஊக்குவித்து வருகிறது. அத்துடன், புதிய கட்டுப் பாடுகளையும் விதித்துள்ளது. அதில், 'ஒரு கல்லுாரிக்கு குறைந்தது, 25 ஏக்கர் நிலப்பரப்பு இருக்க வேண்டும். கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டடம், உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் இருந்தால் மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்' என்று, கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லுாரிக்கான இடங்கள் தேர்வு செய்வது குறித்து, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடம் தேர்வு பணிகள் முடிந்த பின், மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடங்கள் அடிப்படையில், புதிய மருத்துவக் கல்லுாரி அனுமதி கேட்டு, அக்டோபர் மாதத்தில் விண்ணப்பிக்கப்படும்.என்.எம்.சி., அனுமதி அளிக்கும்பட்சத்தில், மத்திய, மாநில நிதி பங்களிப்புடன் கட்டுமான பணி துவங்குவதுடன், அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையும் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
மே 29, 2024 11:07

அதிக மருத்துவப் பட்டதாரிகள் உருவாவது வேலையின்மையை அதிகரிக்கும். எல்லோராலும் வெற்றிகரமாக கிளினிக் நடத்த முடியாது. அரசாலும் எல்லோருக்கும் வேலையளிக்கவும் முடியாது. கிளினிக்கில் நோயாளிகள் வருகை குறைந்தால் அந்த இழப்பை சரிகட்ட மற்ற நோயாளிகளுக்கு அநாவசிய பரிசோதனைகள், மருந்துகளை எழுதி வாங்கி விடுகின்றனர். பாவம் நோயாளிகள். ஆக குறைந்த செலவு வைக்கும் சித்த ஆயுர்வேத இயற்கை மருத்துவ இடங்களை அதிகரிக்கலாம்.


ஆரூர் ரங்
மே 29, 2024 11:00

பல ஆண்டுகளாகவே சில NON CLINICAL மேற்படிப்புக்கான இடங்கள் சேர ஆளில்லாமல் காலியாகவுள்ளன. அதனால் மருத்துவக் கல்லூரிகளில் அவற்றை கற்பிக்க ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில் புதிது புதிதாக கல்லூரிகளை எப்படி திறக்க முடியும்? ஆனால் கேள்விப்பட்ட வரையில் இந்தாண்டு இரண்டு மூன்று தனியார் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன.


Ranganathan
மே 29, 2024 08:45

தனியார் பினாமி மருத்துவ கல்லூரிகளை காக்க, அதிக கல்லூரிகள் வந்தால் மருத்துவ படிப்பும், இன்ஜினியரிங் படிப்பு போல டிமாண்ட் குறைந்து விடும் என்ற பயம் தான் காரணம்......


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை