உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இறந்தும் வாழும் 16 ஆயிரம் பேர்; மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பில் அதிர்ச்சி

இறந்தும் வாழும் 16 ஆயிரம் பேர்; மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் இறந்தபின்னும் 16 ஆயிரம் பேர் வாக்காளர்களாக நீடிப்பது, அதிகாரிகளின் கள ஆய்வில் தெரியவந்தது.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில், பின்னலாடை நிறுவனங்கள் அதிகம் உள்ளன.இவ்விரு தொகுதிகளிலும், வெளிமாவட்டங்களை சேர்ந்த இடம்பெயர்ந்த தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

ஓட்டுப்பதிவு குறைவு ஏன்?

இவர்களில் ஏராளமானோர், திருப்பூரில் மட்டுமின்றி சொந்த ஊரிலும் வாக்காளராக தொடர்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும், திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் ஓட்டுப்பதிவு குறைகிறது.கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 62.60 சதவீதம்; தெற்கில் 62.80 சதவீத ஓட்டுப்பதிவானது. நடப்பாண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், திருப்பூர் வடக்கு தொகுதியில் 59.27 சதவீதமும்; திருப்பூர் தெற்கில் 61.04 சதவீதம் ஓட்டுப்பதிவானது. இரண்டு தொகுதிகளிலும், ஓட்டுப்பதிவு 60 சதவீதத்தை கடந்து, 70 சதவீதத்தை எட்டுவதே குதிரை கொம்பாகி வருகிறது.வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் இணைப்பதன் வாயிலாக, போலிகளை களைந்து, செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது சாத்தியமாகும்.

58 சதவீதம் மட்டுமே

லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பட்டியல் படி, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 23 லட்சத்து, 45 ஆயிரத்து எட்டு வாக்காளர் உள்ளனர். ஆனால், இதுவரை, 58 சதவீத வாக்காளரே ஆதார் இணைத்திருக்கின்றனர். ஆதார் இணைப்பில், திருப்பூர் வடக்கு தொகுதியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துவருகிறது; இந்த தொகுதியில் 40 சதவீத வாக்காளர் கூட ஆதார் இணைக்கவில்லை.ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெறுகிறது. இறந்த வாக்காளரை நீக்குவதற்காக, அவர்களின் குடும்பத்தினர் தாங்களாக முன்வந்து, படிவம் - 7 வழங்கினால் மட்டுமே, பெயர் நீக்கம் சாத்தியமாகிறது. அதனால், இறந்தவர்கள், வாக்காளர் பட்டிலில் தொடர்ந்து உயிர் வாழ்கின்றனர்.வரும், 29ம் தேதி, வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, சுருக்கமுறை திருத்த பணிகள் துவக்கப்படுகின்றன. புதியவர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்கவும், இறந்தவர்களை நீக்கும்வகையிலும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்(பி.எல்.ஓ.,), கடந்த ஆக., முதல் வீடுவீடாக சென்று சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். இம்மாதம் 18ம் தேதியுடன் இந்த முன்திருத்த பணிகள் முடிவடைந்துள்ளன.

1.96 லட்சம் இரட்டைப்பதிவு

பெயர், தந்தை பெயர், புகைப்படம், முகவரி ஒற்றுமையுள்ள, 1.96 லட்சம் வாக்காளர்களுக்கு, இரட்டைப்பதிவு தொடர்பான விளக்கம் கேட்டு, தபால் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும், வாக்காளர் அளிக்கும் பதில் அடிப்படையிலேயே, இரட்டை பதிவு வாக்காளர் நீக்கம் சாத்தியமாகும்.

100 சதவீதம் ஓட்டுப்பதிவு சாத்தியமா?

வாக்காளர் பட்டியலை செம்மையாக்க தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு பக்கபலமாக, அரசியல் கட்சியினரும் இறந்தவர் பெயர் பட்டியல் தயாரித்து வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு சான்றுக்கு விண்ணப்பிக்கும்போதே, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்துக்கான படிவம் பூர்த்தி செய்து பெறவேண்டும். வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பில் கட்சியினருக்குள் கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேர்தலில் நுாறு சதவீத வாக்குப்பதிவு சாத்தியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Balasubramanian
அக் 26, 2024 08:52

ஆவிகள் வந்து துட்டு கூட வாங்காமல் வாக்ளித்து மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவும்! வெற்றிக்கு பின் அவைகளுக்கு படையல் நிச்சயம்


முக்கிய வீடியோ