தர்மஸ்தலா வழக்கில் உண்மைகளை கண்டறிய என்.ஐ.ஏ., விசாரணை வேண்டும் :அமித் ஷாவிடம் 8 மடாதிபதிகள் கோரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
'தர்மஸ்தலா வழக்கில் உண்மைகளை கண்டறிய, என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், கர்நாடகாவைச் சேர்ந்த எட்டு மடாதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏராளமான பெண்களின் உடல்களை புதைத்ததாக, சின்னையா என்பவர் பொய் புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவரை, பின்னால் இருந்து இயக்கிய கும்பலை கைது செய்ய, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, கர்நாடகாவின் ஹரிஹரா பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி வசனானந்த சுவாமி, மங்களூரு குருபூர் வஜ்ரதேஹி மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ராஜசேகரானந்த சுவாமி உட்பட எட்டு மடாதிபதிகள், டில்லியில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, 'தர்மஸ்தலா விவகாரத்தில் மஞ்சுநாதா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினர் மீது அவதுாறு பரப்பப்படுகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை தண்டிக்க வேண்டும். 'தர்மஸ்தலா மீது அவதுாறு பரப்பப்படுவது மிகவும் வேதனை மற்றும் சகிக்க முடியாததாக உள்ளது. 'இந்த வழக்கில் உண்மையை கண்டறிய, விசாரணையை என்.ஐ.ஏ.,வுக்கு ஒப்படைக்க வேண்டும். சனாதன மற்றும் சமண தர்மத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, தங்கள் வேதனையை மடாதிபதிகள் வெளிப்படுத்தினர். தவிர, 2023ல் பெலகாவியில் கொலை செய்யப்பட்ட சமண துறவி நந்தி மஹாராஜா வழக்கு பற்றியும் எடுத்துக் கூறியதுடன், 'தர்மத்திற்காக பாடுபடும் மடாதிபதிகள், துறவியரை பாதுகாக்கவும்; கோவில்கள் அவமதிப்பு செய்வதை தடுப்பது; சிலைகளை சேதம் செய்வதை தடுக்கவும் சட்டம் இயற்ற வேண்டும்' என்றும் மடாதிபதிகள் கேட்டுக் கொண்டனர். அனைத்தையும் பொறுமையாக கேட்ட அமித் ஷா, “தர்மஸ்தலா வழக்கை நான் தனிப்பட்ட முறையில் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து அடுத்த கட்ட முடிவு எடுப்போம். “கோவில்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பப்படுவதை தடுக்க, சட்டம் இயற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும்,” என உறுதி அளித்தார். யு - டியூபர் வீட்டில் சோதனை தர்மஸ்தலா வழக்கில், எஸ்.ஐ.டி., விசாரணையிலும் நேற்று சில சோதனைகள் நடத்தப்பட்டன. தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்டதாக ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோ உருவாக்கி, 'யு - டியூப்' பக்கத்தில் பதிவிட்ட, யு - டியூபர் சமீரின் பெங்களூரு பீன்யாவில் உள்ள வாடகை வீட்டில், பெல்தங்கடி போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இந்த வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள சமீர், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக நீதிமன்றத்திடம் கூறினார். ஆனால், விசாரணை அதிகாரிகள் கேட்ட மடிக்கணினி, கணினியை அவர் சமர்ப்பிக்கவில்லை. இதனால், நேற்று அவரது வீட்டில் சோதனை நடந்தது தெரிய வந்துள்ளது. சோதனையில் சிக்கிய மடிக்கணினி, கணினி, சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. - நமது நிருபர் -