உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு: பிள்ளை போல வளர்க்கும் பாகன் உற்சாகம்

750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு: பிள்ளை போல வளர்க்கும் பாகன் உற்சாகம்

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி நடத்தப்படுகிறது. விழாவின் பிரதான அடையாளமே விஜயதசமியன்று நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலம் தான்.அதிலும், 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் எழுந்தருளி, சாமுண்டீஸ்வரி தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டே ஊர்வலம் வரும் காட்சியை காண்பதற்காக லட்சோப லட்ச மக்கள் மைசூருக்கு வருகின்றனர்.அரண்மனை வளாகத்தில் இருந்து, பன்னிமண்டபம் இருக்கும், 5 கி.மீ., வரை கம்பீர நடைபோட்டு நடக்கும் அபிமன்யூ யானை, எப்போது தங்கள் கண்களில் படும் என்பதை வழி மேல் விழிவைத்து பார்த்துக் கொண்டிருப்பர்.

20 ஆண்டுகள்

இந்த அபிமன்யு யானையின் பாகன் ஜெ.எஸ்.வசந்த், நம் நாளிதழுக்கு மைசூரில் நேற்று அளித்த சிறப்பு பேட்டி:இப்போது எனக்கு 45 வயது. 20 ஆண்டுகளாக நான் அபிமன்யு யானையின் பாகனாக இருக்கிறேன். இந்த யானையுடன் சிறுவயதில் இருந்து பழகி வருகிறேன்.எனக்கு முன்பு, என் தந்தை இந்த யானையின் பாகனாக இருந்தார். அவர் மறைவுக்கு பின் என்னிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அபிமன்யு யானை, எங்கள் குடும்பத்தினருடன் நன்றாக பழகி விட்டது. எங்களை தவிர வேறு யாராவது வந்தால் பக்கத்திலும் சேர்க்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும்.இதனால், நாங்களே இதை பராமரிக்கும் பணியை ஏற்றுக் கொண்டோம். மத்திக்கோடு வனப்பகுதியில் இருக்கும் ஆடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த நாங்கள், யானைகளுடன் அன்புடன் பாசத்துடன் இருக்கிறோம். நாங்கள் சொன்னபடி யானை கேட்கிறது.அரசின் உத்தரவுப்படி, நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவிற்கு வருகிறோம். 60 நாட்கள் வரை குடும்பத்துடன் இங்கே வந்து அரண்மனை வளாகத்தில், தற்காலிகமாக அமைத்துக் கொடுக்கும் தகர ஷெட்டில் தங்கியிருப்போம். விழா முடிந்தபின் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடுவோம்.சம்பளத்துடன் தசரா சிறப்பு தொகையாக 10,000 ரூபாய் கொடுக்கின்றனர். இது மட்டுமின்றி இங்கு தங்குவதற்கு, காஸ் அடுப்பு, மளிகை சாமான்கள் உட்பட அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர். பிள்ளைகள் படிப்பதற்கு தற்காலிக பள்ளி, மருத்துவ வசதி சேவை செய்து கொடுக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.யானை வளர்ப்பாளர் ஜெ.கே.ராஜு கூறியதாவது:நானும் எனது தந்தைக்கு பின், அபிமன்யு யானையை பராமரித்து வருகிறேன். எனக்கு 50 வயது ஆகிறது. 15 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளேன்.யானை என்னுடன் நன்றாக பழகி உள்ளது. எங்களை தவிர மற்றவர்கள் யாரும் இதன் பக்கம் வரமாட்டார்கள். மற்ற யானைகளின் பாகன்கள், வளர்ப்பாளர்கள் வந்தாலும் அருகில் சேர்க்காது. மற்றவர்களின் பேச்சை கேட்காது.ஆனால் நானும், வசந்தும் சொன்னால் மட்டும் கேட்கும். அந்த அளவுக்கு நெருங்கி பழகி விட்டோம்.எங்களுக்கு சீருடை, பிள்ளைகளுக்கு படிப்பதற்கு புத்தகம், சீருடை, புத்தக பை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கின்றனர். அவசியம் இருந்தால் விடுமுறை எடுத்துக் கொண்டு, சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வருகிறோம். அந்த சமயத்தில் நம் குடும்பத்தை சேர்ந்த யாராவது ஒருவர் யானையை கவனித்து கொள்வர்.

விசேஷ குணம்

இந்த யானையை 1970ல் குடகு மாவட்டம், எப்பள்ளி வனப்பகுதியில் சிறை பிடிக்கப்பட்டது. இதன் விசேஷ குணம் என்னவென்றால், காட்டு யானைகளை சிறை பிடிக்கவும், கும்கி யானையாக பழக வைக்கவும் சாமர்த்தியம் கொண்டுள்ளது.முதன் முறையாக, 2012ம் ஆண்டில் தசரா விழாவில் பங்கேற்றது. சாதாரண யானையாக ஊர்வலத்தில் பங்கேற்ற நிலையில், அர்ஜுனா யானைக்கு 60 வயது ஆனதும் அம்பாரி சுமக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக தசரா விழாவில் தங்க அம்பாரியை சுமந்து வருகிறது.அபிமன்யு யானைக்கு இப்போது 59 வயது நடக்கிறது. அடுத்த ஆண்டு மட்டும் தான் கடைசியாக அம்பாரியை சுமக்கும். அதன் பின், மற்றொரு யானைக்கு அம்பாரி சுமக்கும் பொறுப்பு வழங்கப்படும். 59 வயதான அபிமன்யு யானையின் உயரம் 2.74 மீட்டர். 5,560 கிலோ எடை கொண்டுள்ளது. மத்திக்கோடு யானை முகாமில் வளர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜ போஜனம் விருந்து

யானைகளுக்கு தினமும் ஒவ்வொரு வகையான உணவு தயாரித்து கொடுக்கப்படுகிறது. காட்டுப் பகுதியில் கேழ்வரகு உருண்டை, அரிசி சோறு உருண்டை, காட்டில் கிடைக்கும் இலைகள் மட்டும் உணவாக தரப்பட்டன. இங்கு வந்ததும் 60 நாட்கள் வரை எல்லா யானைகளுக்கும் ராஜ போஜனம் விருந்து அளிக்கப்படுகிறது. அதிலும் அம்பாரி சுமக்கும் அபிமன்யுவுக்கு சிறப்பு உபசாரம் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு வழங்கப்படும். பச்சைப் பருப்பு, உளுந்து, புழுங்கல் அரிசி சோறு உள்ளிட்டவற்றை நெய் போட்டு வேகவைத்து ருசியாக கொடுக்கப்படுகிறது. வெண்ணெய், கொப்பரை தேங்காய், நெல் சேர்த்து, அவற்றை காய்ந்த புல்லில் உருண்டையாக்கி, காலை வேளையில் நடைபயிற்சி முடித்து விட்டு வந்ததும் கொடுக்கப்படுகிறது. யானைகளுக்கு ஆலமரத்தின் இலைகள் என்றால் ரொம்ப இஷ்டம். இதனால் லாரிகளில் ஆலமர கிளைகளை வெட்டி வந்து, இலைகள் பறித்து வழங்கப்படும். இது தவிர பச்சைப் புல், கரும்பு, வாழைப்பழம், பலாப்பழம் போன்றவையும் கொடுக்கப்படும்.

கால்களுக்கு மசாஜ்

ஜம்பு சவாரி ஊர்வலத்துக்காக நடைபயிற்சிக்கு அழைத்து வந்ததும், கால்களின் பாதம், முட்டி பகுதியில் எண்ணெயால் தடவி மசாஜ் செய்யப்படும். வயிற்று போக்கு, வயிற்று வலி, காய்ச்சல் வராமல் எச்சரிக்கை வகிக்கப்படும். ஒருவேளை நோய் தாக்கினால், உடனே அதிகாரிகள் மூலம், கால்நடை மருத்துவர்களை வரவழைத்து தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்.சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால், ஓய்வு கொடுத்து காட்டுக்கு அழைத்து செல்லப்படும். இதற்கு பதில் வேறு யானை வரவழைக்கப்பட்டு, பழக வைக்கப்படும். வாரத்தில் இரண்டு நாட்கள் நன்றாக தேய்த்து குளிக்க வைக்கப்படுகிறது. பைப்புகள் மூலமாக நீர் பாய்ச்சி உடலை குளிர்ச்சி ஆக்கப்படும்.

எப்போது?

அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் யானைகளுக்கு நடை பயிற்சி இருக்காது. அது, அரண்மனை வளாகத்தில் மட்டும் நடக்கும். அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே அழைத்து செல்வதில்லை. அந்த நாட்களில் சில யானைகளுக்கு மதம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. இதனால் மற்ற நாட்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படும்.

பாரம் சுமக்கும் பயிற்சி

அடுத்த வாரத்தில் இருந்து தங்க அம்பாரி சுமப்பது போன்று, அபிமன்யு யானைக்கு, 750 கிலோ எடையுடன் பாரம் சுமந்து செல்லும் பயிற்சி அளிக்கப்படும். அதன் பின், பட்டாசு வெடி சத்தம், பீரங்கி சத்தம், பொதுமக்கள் நடுவில் நடந்து செல்லும் பயிற்சி, குதிரைகள் மத்தியில் நடக்கும் பயிற்சி என படிப்படியாக ஒவ்வொரு பயிற்சி அளிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை