உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை; கோவையில் மட்டும் அதிகாரிகள் பெரிய குறட்டை!

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை; கோவையில் மட்டும் அதிகாரிகள் பெரிய குறட்டை!

தமிழகம் முழுவதும் லஞ்ச அதிகாரிகளைப் பிடிப்பதில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், லஞ்சம் கொழிக்கும் கோவையில் யாரையுமே பிடிக்காமல் இருப்பது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, பல்வேறு அலுவலகங்களிலும் லஞ்ச அதிகாரிகள் பலரும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும், கையூட்டுமாக சிக்கி வருகின்றனர். குறிப்பாக, பதிவுத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாக அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று துறைகளிலும் தான், கடந்த ஆட்சியை விட லஞ்சம் இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது.

லஞ்சத்தில் திளைக்கும் இரு துறைகள்

அதிலும் நில மதிப்பு அதிகமாகவுள்ள கோவையில் லஞ்சத்தின் அளவு, உச்சத்தைத் தொட்டுள்ளது. இதில் பதிவுத்துறைக்கும், வருவாய்த் துறைக்கும் இடையில் தான் கடும்போட்டி நடக்கிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, ஒரு பத்திரப்பதிவுக்கு இவ்வளவு, பட்டா பெயர் மாற்றத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்ட தொகையே, லஞ்சமாகப் பெறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது பத்திரப் பதிவுக்கும், பட்டா பெயர் மாற்றவும் சொத்துக்களின் மதிப்பை வைத்து, லஞ்சம் நிர்ணயிக்கப்படுகிறது. சென்னைக்கு அடுத்ததாக, கோவையில் தான் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் நன்றாக நடப்பதைத் தெரிந்து கொண்டு, பெரும் தொகையைக் கொடுத்து, இங்குள்ள அலுவலகங்களுக்கு சார்பதிவாளர்கள் பலரும், மாறுதல் வாங்கி வந்துள்ளனர். இதனால் யாருக்கும், எதற்கும் பயப்படாமல் லட்சங்களில் லஞ்சம் கேட்கின்றனர். கோவையின் இணைப்புப் பகுதியிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், பணியாற்றும் சார்பதிவாளர் ஒருவர், லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்பதுடன், தர மறுத்தால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, பத்திரம் தராமல் இழுத்தடிப்பதாக, பாதிக்கப்பட்ட பலரும் தகவல் தெரிவிக்கின்றனர். இதேபோல, பட்டா பெயர் மாற்றுவதற்கும் வருவாய்த்துறையில் பணியாற்றும் தாசில்தார், துணை தாசில்தார் மற்றும் சர்வேயர் போன்றவர்களும், தாறுமாறாக லஞ்சம் வாங்குவதாக புகார்கள் குவிகின்றன.

மாநகராட்சி அலுவலகத்திலும்

மாநகராட்சி அலுவலகத்திலும் சொத்து வரி புத்தகம் போடுவது, பெயர் மாற்றுவது போன்றவற்றுக்கும், கட்டட அனுமதிக்கும் அவற்றின் மதிப்பை வைத்து, லஞ்சம் கேட்கப்படுகிறது.மற்ற மாநகராட்சிகள், மாவட்டங்களை ஒப்பிடுகையில், கோவையில் லஞ்சம் இமயமளவுக்கு உயர்ந்து விட்டதாக தொழில் முனைவோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பினரும் புகார்களைக் குவிக்கின்றனர். மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாததே, இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

துறை இருக்கிறதா?

கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஒரு பிரிவு செயல்படுகிறதா அல்லது கூண்டோடு கலைத்து விட்டார்களா என்கிற அளவுக்கு, அதன் செயல்பாடு உள்ளது. இந்த ஆண்டில் அன்னுார் சார்பதிவாளர் அலுவலகத்திலும், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்திலுமாக, ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று என, பெயரளவில் இரண்டு ரெய்டுகள் நடந்துள்ளன. ஆனால் எந்த ஆபீசிலும், லஞ்சம் வாங்கும்போது யாருமே கைது செய்யப்படவில்லை; பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. பதிவுத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பலரும், கோடிகளில் சொத்துக்களைக் குவித்திருப்பது பற்றியும் எந்த வழக்கும் சமீபமாக பதிவு செய்யப்படவே இல்லை. இவர்களில் பலர் ஏராளமான முறைகேடுகளைச் செய்து விட்டு, சத்தமின்றி ஓய்வும் பெற்றுவிட்டனர். இந்த அலுவலகங்களில் இருந்து, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாதாந்திர மாமூல் போவதால் தான் அடக்கி வாசிக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. லஞ்ச அதிகாரிகளை மட்டு மின்றி, அதற்குத் துணை போகும் லஞ்ச ஒழிப்பு போலீசாரையும், கூண்டோடு மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்!

புரோக்கர்களே துணை!

கோவையிலுள்ள தாலுகா, சார்-பதிவாளர் மற்றும் ஆர்.டி.ஓ., ஆபீஸ்களில் புரோக்கர்களின் ஆதிக்கமும் கொடிகட்டிப் பறக்கிறது. அதிகாரிகளின் கம்ப்யூட்டர்களின் 'யூசர், பாஸ்வேர்டு' வைத்து, அவர்களே அவற்றைக் கையாளும் அளவுக்கு, அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால், அரசு நிலத்துக்கே பட்டா போட்டுத் தரும் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இவர்களைத் தடுப்பதற்குக் கூட, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Suresh R
ஜூன் 01, 2024 01:03

Middleman technology will be enabled in all tier2 cities/ towns. This is a clear government ploy. All the middle men will be from ruling party. Tactical move


KAMARAJ M
மே 31, 2024 14:13

ஒருத்தர் தப்பு செய்த பிடிக்கலாம் மொத்தமா தப்பு செய்த


Gajageswari
மே 31, 2024 12:52

ஒன்லைன் பட்டா மாறுதலில் உங்க பெயர் சேர்க்கப்படும். ஆனால் முந்தைய பெயர் அப்படியே இருக்கும். அப்போது தான் லஞ்சம்


Mahendran Puru
மே 31, 2024 07:47

இது போன்ற செய்திகள் அதிகம் பகிரப்பட வேண்டும்.


krishna
மே 30, 2024 21:54

ENNANGA IDH7.IDH7DHAAN DRAVIDA MODEL AATCHI. AAYA MOORITU PONGA.ILLA GUNDAS PAAYUM.


sundaran manogaran
மே 30, 2024 10:52

நீலகிரியிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது வஞ்ச ஒழிப்பு த்துறை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை