உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாடிக்கையான வாசகர்களுக்கு மட்டும் தான் அந்துமணியின் பதில்கள் கிடைக்குமா?

வாடிக்கையான வாசகர்களுக்கு மட்டும் தான் அந்துமணியின் பதில்கள் கிடைக்குமா?

க.ராஜேந்திரன், மதுரை:

தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு, முன் ஜாமின் தர மறுத்தது போல, ஊழல் குற்றச்சாட்டில் வழக்கை சந்திக்கும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும், ஜாமின் தர மறுத்து இருந்தால், நன்றாக இருந்திருக்குமே... இந்நேரம் ஊழல் ஒழிந்திருக்குமே... ஏன் செய்யவில்லை?

குற்றச்சாட்டுக்கு உள்ளானவரிடம் விசாரணை முடித்ததும், சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கும் வரை, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை சிறையில் வைத்திருக்க, நம் சட்டம் இடம் கொடுக்கவில்லை; அதனால் இப்படி நடக்கிறது!ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்:

'வாடிக்கையான வாசகர்களுக்கு மட்டும் தான், அந்துமணியின் பதில்கள் கிடைக்கும்' என்று, என் நண்பர் கூறுகிறாரே?

அப்படியா... உங்கள் கடிதங்களுக்கு கூட பதில் எழுதி இருக்கிறேனே நடராஜன்... நீங்கள் வாடிக்கையான வாசகர் தானே! உங்கள் நண்பரிடம் காட்டுங்கள்!ஜி.விஜயகுமார், கோவை:

த.வெ.க., - எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு தவறுதலாக, 'வாட்ஸாப் மெசேஜ்' அனுப்பிய செயல், முதல்வர் விஜயின் கவனத்திற்கு வந்திருக்குமா?

கண்டிப்பாக வந்திருக்கும். இவ்விஷயத்தில் விஜய், மவுனம் காப்பதை விட, கட்சி ரீதியான நடவடிக்கை எடுத்து, நிரபராதியாக இருந்தால், நிரூபணமான பின், மீண்டும் பதவி கொடுக்கலாமே! மகளிர் ஆணையம், தானாக முன்வந்து வழக்கு பதியும் வரை, காத்திருந்திருக்க வேண்டாமே! தன் மவுனம், கட்சியினர் மீண்டும் மீண்டும் தவறு செய்யத் துாண்டி விடும் என்பதை, விஜய் புரிந்து கொள்ள வேண்டும்!ச.சாந்தி, கரூர்:

'வாட்ஸாப்' தகவல்களைப் பெரிதாக்கக் கூடாது என்கிறாரே, காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்?

இவர் அதிகம் நேசிக்கும் நெருங்கிய பெண் உறவினர் ஒருவருக்கு, 'வாட்ஸாப்'பில், விரும்பத் தகாத வகையில் தகவல்கள் வந்தால், இவரால் சும்மா இருக்க முடியுமா?கே.எல்.கந்தரூபி, சென்னை:

'புத்தக கொள்முதல் முறைகேட்டில், ஒருவரைக் கூட கண்டுபிடிக்காதது, அதிகாரி களின் இயலாமை' என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனரே?

நீதிபதிகள், மிகச் சரியாக சொல்லி இருக்கின்றனர். அமைச்சர்களுக்கு, அரசு நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று, இன்னும் புரியவில்லை. கைதேர்ந்த அதிகாரிகள், நேர்மையான முறையில் நிர்வாகம் செய்ய அமைச்சர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளனர். அதற்கு இன்னும் காலம் ஆகும். இப்போதைக்கு பேட்டி மட்டும் கொடுத்து, அமைச்சர்கள் சமாளிக்கின்றனரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அதன் விளைவு தான், இந்த இயலாமை!கி.பாலமுருகன், கரிசல்புலி:

'விண்வெளிக்குச் சென்று, ராக்கெட்டை பத்திரமாக தரையிறக்கும் எண்ணம், நடிகர் ஜாக்கிசானின் படத்தைப் பார்த்ததால் உதயமானது' என, அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் கூறி இருக்கிறாரே?

சீனாவின் சிறப்பு கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்கிசான். கம்பு சுற்றி, நிறைய சாகசங்கள் செய்தபடி படங்களில் தோன்றுவார். அவரின் ரசிகர் போலிருக்கிறது, எலன் மஸ்க். இந்த தொழிலதிபர், நம் நாட்டுக்கு எதிரி போல செயல்பட்டாலும், அவரின் திறமையைப் பாராட்டியே தீர வேண்டும். அதுவும், விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட், தன் பணியை முடித்து, பூமிக்குத் திரும்பும்போது, அதை லாவகமாக, ஏவிய இடத்திலேயே பிடித்த செயல், மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anonymous
நவ 18, 2026 10:08

வாசகர் நடராஜன் சொல்வதை ஆமோதிப்பது போல் , நீங்கள் வாடிக்கையான வாசகர் தானே? உங்களுக்கு பதில் அளித்து உள்ளேனே? என்று அந்துமணி கூறுவது உண்மையை ஒப்பு கொண்டு பேசுவது போல உள்ளதே? ஒன்று அந்துமணி பெயரில்வேறு யாரோ பதில் அளிக்கிறார்கள் அல்லது அந்துமணி முன்பு போல இல்லை, நிறைய மாறி விட்டார்.


Kalyanaraman Subramaniam
நவ 18, 2026 11:00

ஒரு வேளை எதோ ஒரு AI அந்துமணி பேர்ல பதில் எழுதுதோ?


குமரி குருவி
நவ 18, 2026 04:58

தமிழை வைத்து பிழைக்கும் திருட்டு வரலாற்று மாற்றும் திராவிட கூட்டம் போலி குப்பைபுத்தகங்கள் மூலம் அடித்த கொள்ளை...மன்னிக்க கூடாதது..


என் ஏ அரவழகன்
நவ 18, 2026 04:56

மாவட்ட பெண் ஆட்சி தலைவருக்கே...தவெக ஆட்சியில் ஆளுங்கட்சி எம்எல்ஏ வால் தொல்லை என்றால்..மற்றவர்களுக்கு...?


rama adhavan
நவ 18, 2026 04:39

சுமார் 10க்கும் குறைவான கேள்விகளுக்கே தினமும் பதில் அளித்தாலும், தேர்வு செய்யும் கேள்விகள் சமீபத்திய நிகழ்ச்சியாக உள்ளது. பதில்களைத் தர நிறைய நேரமும், ஊன்றிய கவனமும் செலவிடப் படுவது நன்கு தெரிகிறது. பாராட்டுக்கள்.


vijay
நவ 18, 2026 04:15

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அந்துமணியின் பதில்கள்