உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரத்தில் சமரசத்திற்கு தயாரா; உயர்நீதிமன்றம் கேள்வி

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரத்தில் சமரசத்திற்கு தயாரா; உயர்நீதிமன்றம் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், சமரசம் மூலம் தீர்வு காண தயாரா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியது. மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் துாணில் (தர்காவிலிருந்து 15 மீ., தொலைவில்) கார்த்திகை தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். இதுபோல் பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் மனு செய்தனர். இவற்றை டிச.1ல் அனுமதித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்துாணிலும் கார்த்திகை தீபத்தை கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்,' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து கோயில் செயல் அலுவலர், '150 ஆண்டுகளுக்கு மேல், உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டப பகுதியில் மட்டுமே தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்துாணில் ஏற்றப்பட்டது என்பதற்கு ஆவணம் இல்லை. தனிநீதி பதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்,' என மேல்முறையீட்டு மனு செய்தார். 20 மேல்முறையீட்டு மனுக்கள் இதுபோல் கலெக்டர், போலீஸ் கமிஷனர், அற நிலையத்துறை இணை கமிஷனர், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து 20 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின. தீபத் துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத தால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'தீபத்துாணில் ராமரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,' என டிச.4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவிட்டார்.

மேல்முறையீடு

இதை எதிர்த்து கலெக்டர், போலீஸ் கமிஷனர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அவமதிப்பு வழக்கு டிச.9ல் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'நீதிமன்ற உத்தரவு தொடர்ந்து மீறப்படுகிறது. மாவட்ட அளவிலான அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் தொடர்பாக சுற்றறிக்கை அல்லது அறிவுறுத்தல் வெளியிடும் திட்டம் உள்ளதா என்பதை அறிய தமிழக தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டிச.17ல் காணொலியில் ஆஜராக வேண்டும்,' என உத்தர விட்டார். இதை எதிர்த்து தலைமைச் செயலர், ஏ.டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் தரப்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இம்மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் நேற்று 3வது நாளாக விசாரணைக்கு வந்தன. வக்பு வாரியம் தரப்பில் வழக்கறிஞர்கள் அப்துல் முபின், ஹாரூன் ரஷீத், கலெக்டர், போலீஸ் கமிஷனர் தரப்பில் வழக்கறிஞர் விகாஸ் சிங், ராமரவிக்குமார், பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், வள்ளியப்பன், வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், நிரஞ்சன் எஸ்.குமார், அருண் சுவாமிநாதன் ஆஜராகினர். தீபத்துாண் பகுதி தர்காவிற்கு சொந்தமானது அப்துல் முபின்: திருப்பரங்குன்றம் ஒட்டுமொத்த மலை கோயிலுக்கு சொந்தமானது. நெல்லித்தோப்பு, தர்கா, அதற்கு செல்லும் படிக்கட்டு, புது மண்டபம் மற்றும் அருகிலுள்ள பகுதி தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது என 1920ல் சிவில் வழக்கில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தீபத்துாண் என அழைக்கப்படும் பகுதி தர்காவிற்கு சொந்தமானது. லண்டன் பிரிவி கவுன்சில் உத்தரவில் தீபத்துாண் என குறிப்பிடப்படவில்லை. இதற்கு முந்தைய எந்த வழக்குகளிலும் அத்துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. அதில் தீபம் ஏற்றும் நடைமுறை ஏற்கனவே இல்லை. தர்கா மண்டப பகுதியை கடந்துதான் அத்துாணிற்கு செல்ல முடியும். மாற்று வழி இல்லை. அப்படிக்கட்டுகளில் சாதாரண நாட்களில் ஹிந்துக்கள் சென்றுவருவதில் ஆட்சேபம் இல்லை. வழிபாட்டிற்கு சென்றுவந்தால் அது ஆக்கிரமிப்பிற்கு சமம். அது சிக்கந்தர் மலை பல நுாற்றாண்டுகளாக அழைக்கப்படுகிறது. தர்கா அமைந்துள்ள ஒரே பாறையில் குதிரைச்சுனையும், அதை ஒட்டி துாணும் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல்துறைக்கும் உரிமை உள்ளது. தொல்லியல்துறையிடம் தனி நீதிபதிகருத்து கோரவில்லை. இணக்கமான சூழல் நிலவ விரும்புகிறோம். கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே நீதிமன்ற கண்காணிப்பில் சமரச தீர்விற்கு வழிவகை செய்ய வேண்டும் என தனி நீதிபதியிடம் வலியுறுத்தினோம். அது பற்றி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.நீதிபதிகள்: சமரச தீர்வு காண வேண்டும் என்பதில் தற்போதும் அதே நிலைப்பாட்டில் உள்ளீர்களா.அப்துல் முபின்: அதே நிலைப்பாட்டில் உள்ளோம்.நீதிபதிகள்: சமரச தீர்வின் நிலைப்பாடு குறித்து சம்பந்தப்பட்ட மற்ற தரப்பினரிடம் விபரம் கோரப்படும். தர்காவிற்கு சொந்தமான பகுதி அளவீடு செய்யப்பட்டுள்ளதா, சொந்தமான பகுதி தொடர்பான ஆவணங்கள் உள்ளதாஅப்துல் முபின்: அளவீடு செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் உள்ளன. (ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது).2 முறை பிரச்னைவிகாஸ்சிங்: திருப்பரங்குன்றத்தில் ஹிந்து, முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் மலை உச்சியில் தீபமேற்றும் விவகாரத்தில் 2 முறை பிரச்னை எழுந்தது. அமைதி பாதித்தது. அப்போது தீபம் ஏற்ற அனுமதி அளிக்கவில்லை. தற்போது தனிநீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது தீபம் ஏற்றப்படும் இடத்தை தவிர மாற்று இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிப்பது ஆகம சாஸ்திரத்திற்கு எதிரானது.தர்காவிற்கு சொந்தமான பாதை வழியாக சென்றுதான் அத்துாணில் தீபம் ஏற்ற முடியும். இதை அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். தமிழகத்தில் ஒரு நடிகரை (விஜய்) பார்ப்பதற்காக கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் இறந்தனர். துாணில் தீபம் ஏற்றுவதை பார்க்க பல லட்சம் பக்தர்கள் ஒன்று கூடுவர். அதற்குரிய பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் துாண் அமைந்துள்ள பகுதியில் இல்லை.நீதிபதிகள்: அனைவரையும் துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி அனுமதிக்கவில்லை. ராமரவிக்குமார் மற்றும் இதர மனுதாரர்களுடன் 10 பேரைத்தான் தீபம் ஏற்ற அனுமதித்துள்ளார். விகாஸ் சிங்: அப்போது அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டது. அமைதியை நிலைநாட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் போலீஸ் கமிஷனரை உடனடியாக ஆஜராக தனி நீதிபதி உத்தரவிட்டார். அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் தலைமைச் செயலர், ஏ.டி.ஜி.பி.,ஆஜராகுமாறு தனி நீதிபதி உத்தரவிட்டது ஏற்புடையதல்ல.கோரியதற்கு அப்பால்...ராமரவிக்குமார் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் தீபத்துாணில் ஏற்ற வேண்டும் என்கிறார். அவர் கோரிய நிவாரணத்திற்கு அப்பால் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பொது அமைதி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் இப்பிரச்னை குறித்த விவாதம் பற்றி எரிகிறது.தனி நீதிபதி எடுத்துக்கொண்ட சத்தியபிரமாணத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார். அவர் தேர்தலில் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார்.வெங்கடேஷ்: தனி நீதிபதி பற்றி இவ்வாறு குறிப்பிடுவது துரதிர்ஷ்டவசமானது. ஏற்புடையதல்ல.குரு கிருஷ்ணகுமார்: மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். மலையில் தனி நீதிபதி ஆய்வு செய்தபின்தான் அத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். அத்துாணில் தீபம் ஏற்றும் நடைமுறை இருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றாமல் தடுக்கப்பட்டது. இதனால் தனி நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.ஒரு வழக்கு அடிப்படையில் உயர்நீதிமன்றம், 'எதிர்காலத்தில் தேவையெனில் வேறு இடத்தில் தீபம் ஏற்றும் வகையில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து முடிவெடுக்கலாம்,' என 1996ல் தனி நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி அனைவரும் பார்க்கும் வகையில் தீபம் ஏற்ற முடிவெடுக்கலாம் என்பது தெளிவாகிறது. இதை எதிர்த்து தற்போதுவரை தர்கா, கோயில் நிர்வாகங்கள் மேல்முறையீடு செய்யவில்லை.இரண்டாக பிரியும் பாதைமலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என 2014ல் தாக்கலான வழக்கில் தர்கா நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை எனக்கூறி தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பக்தர்கள் மனு அளித்தால் அதை கோயில் நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். அறங்காவலர் குழு இல்லையெனில் செயல் அலுவலர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. அறங்காவலர் குழு உள்ளபோது அதற்குறிய பணியை செயல் அலுவலர் மேற்கொள்ள முடியாது. அவர் தன்னிச்சையாக மனுவை நிராகரித்தது ஏற்புடையதல்ல.நெல்லித்தோப்பிற்கு செல்லும் பாதை 2 ஆக பிரிகிறது. ஒரு பாதை தீபத்துாண், மற்றொரு பாதை தர்காவிற்கு செல்கிறது. நெல்லித்தோப்பிற்கு செல்ல மலை அடிவாரத்திலுள்ள படிக்கட்டு பாதை தர்காவிற்கு சொந்தமானது அல்ல. அது கோயிலுக்கு சொந்தமானது. மலை மேல் உள்ள பாதை தர்காவிற்கு சொந்தமானது. கோயிலுக்குரிய பாதை மூலம் தர்காவிற்கு செல்வதை யாரும் தடுக்கவில்லை. அவ்விவகாரத்தில் எங்கள் தரப்பில் மாறுபட்ட நிலைப்பாடு எடுத்தால் நிலைமை என்னவாகும். நாங்கள் யாரையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை.நீதிபதிகள்: 1996ல் உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தீபத்துாண் என எதுவும் குறிப்பிடவில்லை. மாற்று இடம் குறித்து பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டார். அரசு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்கிறது.சிலர் மலையை சமணர் குன்று என்கின்றனர். அறநிலையத்துறை அத்துாணை சர்வே கல் என்கின்றது. இச்சூழலில் தனி நீதிபதி 3 வது நீதிபதிக்கு பரிந்துரைத்திருக்க வேண்டும். இத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற முடிவிற்கு எப்படி வந்தார்.குரு கிருஷ்ணகுமார்: 1996 தீர்ப்பின்படி மற்ற இடம் எனில் மலையின் ஒட்டுமொத்த பகுதியை குறிக்கும். தீபத்துாண் இருக்கும் இடத்தை குறிப்பிடவில்லை என்பதால் அதில் தீபம் ஏற்ற முடியாது என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியுமா. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை.நீதிபதிகள்: சமரச தீர்விற்கு உங்கள் தரப்பில் தயாரா.குரு கிருஷ்ணகுமார்: எங்கள் தரப்பு மனுதாரர்கள், வழக்கறிஞர்களிடமிருந்து அறிவுறுத்தல் எதுவும் இல்லை. நீதிமன்றம் வலியுறுத்துவதால் நிலைமை அவர்களிடம் எடுத்துக்கூறப்படும்.அரசு தரப்பு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., இன்று (டிச.17 ) காணொலியில் ஆஜராக வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். அந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்.நீதிபதிகள்: தடை விதிக்க வாய்ப்பில்லை. தனி நீதிபதியிடம் முறையிடலாம். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் இன்று (டிச.17) ஒத்திவைத்தனர்.

கோயில் நிர்வாகத்தின் முரண்பட்ட கருத்துக்கள்

* இவ்வழக்கு டிச.12ல் விசாரணையின்போது கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி தெரிவித்தது: நீண்டகால நடைமுறையை மீறி தீபம் ஏற்றும் இடத்தை அடிக்கடி மாற்ற முடியாது. அது தீபத்துாண் என்பதற்கு ஆதாரம் இல்லை. அது நில அளவை எல்லையை குறிக்கும் சர்வே கல். அது கிரானைட்டால் ஆனது. அதில் தீபம் ஏற்றுவது பாதுகாப்பற்றது. அதில் தீபம் ஏற்றுவதற்குரிய கட்டமைப்பு இல்லை என வாதிட்டார். * டிச.15ல் விசாரணையின்போது அதே கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோதி வாதிட்டது: ம.பி.,யிலிருந்து வந்த சமணர்கள் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி உள்ளிட்ட 8 இடங்களில் கி.மு.,3ம் நுாற்றாண்டில் வாழ்ந்தனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாண் போன்ற கட்டமைப்பு கீழக்குடியில்குடி சமணர்மலையில் துாண், கீழவளவு மலையில் 2 துாண்கள், கர்நாடகா சரவணபெலகுளாவில் உள்ள தீபத்துாண் போல் உள்ளது. இத்துாண் போன்ற கட்டமைப்பு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குரியது அல்ல. இரவில் தீபம் ஏற்றுவர். அதன் வெளிச்சத்தில் அமர்ந்து விவாதிப்பர். * இதற்காக மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் சமணர்கள் துாண்களை நிறுவினர். இது பற்றிய குறிப்புகள் மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய 'சமணமும், தமிழும்'தலைப்பிலான புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இத்துாண்களை ஹிந்துக்கள் உரிமைகொண்டாட முடியாது என வாதிட்டார். இப்படி ஒரே வழக்கில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் நில அளவைக்கல் என்றும் சமணர் துாண் என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து முரண் பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பாரதன்
டிச 17, 2025 16:16

அந்நிய ஆக்கிரமிப்பு மதங்களை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேச விரோத சக்திகள் கூட்டாக செயல்பட்டு வருகிறது. இந்துக்கள் இனியும் தூங்கினால் நமது நாடு நமக்கு இல்லாமல் போய் விடும்.


ஆரூர் ரங்
டிச 17, 2025 09:14

வந்தேறி ஆக்கிரமிப்பு கூட்டத்துடன் சமரசமா? நேற்று நடந்த அவுஸ்திரேலிய துர் சம்பவத்துக்குப் பிறகும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. .


Anantharaman
டிச 17, 2025 07:50

சமரசமாகி மண்ணாவது? எங்கிருந்து வந்தேறி மலையை ஆக்ரமித்து கட்டிய தர்கா. சமரசம் யாருடன்? நெவர்.


N Annamalai
டிச 17, 2025 07:00

இதில் சமணர்களை இணைக்க வேண்டும் .ஏன் என்றால் அவர்கள் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர்கள்.அவர்கள் ஆவணங்களை கொடுத்து எங்கள் மலை என்று கூறினால் அறம் இல்லா துறை என்ன செய்யும் .மிக கேவலமாக அரசு நடக்கிறது .உண்டியல் காசில் வாழும் இவர்கள் எப்படி நாத்திகம் பேசுகிறார்கள் ?.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 17, 2025 17:21

உண்டியல் காசில் வாழும் எவர்கள்? இல்லை அதை மடக்கி தட்டில் இருந்து இடுப்பில் சொருகி வாழும் அவர்களா?


Mahendran Puru
டிச 17, 2025 06:44

அப்பன் சுந்தரன் ஒரு புறம் மகன் அழகன் முருகன் ஒரு புறம், அன்னை மீனாட்சி அரசியாய் நின்று அருள் பாலிக்கும் மதுரையில் இந்துத்வ கலாட்டா பலிக்காது. அன்னையின் அருள் அனைவருக்கும் உண்டு.


Kasimani Baskaran
டிச 17, 2025 07:43

மலையே வஃக்ப் சொத்து, அங்கு மாட்டு பிரியாணி சாப்பிடுவோம், தீபத்தூணில் தீபமேற்ற விட மாட்டோம் - அது சர்வே கல் போன்ற வன்மங்கள் உங்களுக்கு உரைக்கவில்லையா? வக்ப் இடத்தில கல்லறை வைத்தால் அல்லது மசூதிக்கு அருகில் பிணங்களை வைத்தால் விடுவார்களா? இந்துக்கள் சகித்துப்போவதால் சிக்கல் பெரிதாகவில்லை.


D.Ambujavalli
டிச 17, 2025 06:15

சமயம்,a இஸ்லாம் எல்லாமே ஹிந்து சனாதன தர்மத்துக்குப் பின் தான் வந்தவை. சமணர்கள் இரவில் , விட்டால் பூச்சிகள் வந்து விழும் என்பதால் விளக்கீராமல் இருந்தவர்கள், தூணின்மேல் தீ ஏற்றியதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 17, 2025 19:07

“ ம.பி.,யிலிருந்து வந்த சமணர்கள் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி உள்ளிட்ட 8 இடங்களில் கி.மு.,3ம் நுாற்றாண்டில் வாழ்ந்தனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாண் போன்ற கட்டமைப்பு கீழக்குடியில்குடி சமணர்மலையில் துாண், கீழவளவு மலையில் 2 துாண்கள், கர்நாடகா சரவணபெலகுளாவில் உள்ள தீபத்துாண் போல் உள்ளது.” , இது பெட்டிச் செய்தியில் உள்ளதே


ஜெய்ஹிந்த்புரம்
டிச 17, 2025 04:56

சாம்பார், ரசம் ஓக்கே. சமரசம் நோ.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 17, 2025 04:54

நீதிமன்னறமா, கருப்பு அங்கி கட்டப்பஞ்சாயத்து கூட்டமா? ஜைனர்களை இன்னொரு கட்சியாக இணையுங்கள்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ