உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முடக்கப்படும் வங்கி கணக்குகள்: அவதிப்படும் அப்பாவிகள்! வெளிமாநில சைபர் கிரைம் போலீசாரால் சிக்கல்

முடக்கப்படும் வங்கி கணக்குகள்: அவதிப்படும் அப்பாவிகள்! வெளிமாநில சைபர் கிரைம் போலீசாரால் சிக்கல்

வெளி மாநிலங்களில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்படும் நபர்கள், தாங்கள் மோசடி செய்த பணத்தை, யாருடைய வங்கி கணக்கில் செலுத்தினரோ, அவர்களின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளனர். அதை சரி செய்ய, தமிழக போலீசார் உதவ மறுப்பதால், எந்த குற்றமும் செய்யாத அப்பாவி மக்கள் வெளி மாநிலங்களுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்தவர் ரத்தினகுமார்; மளிகை வியாபாரி. கடையில் பொருட்கள் வாங்குவோர், 'பேடிஎம்' உள்ளிட்ட செயலி வழியாக செலுத்திய பணம் அவரது வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.

நடவடிக்கை

திடீரென அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவர் வங்கியை தொடர்பு கொண்ட போது, கர்நாடகா மாநிலம், மைசூரு சைபர் கிரைம் போலீசார் முடக்கி உள்ளதாக தெரிவித்தனர். எதற்காக என்று கேட்டபோது, சைபர் குற்றவாளி ஒருவர், 3,000 ரூபாய் செலுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.அதைத்தொடர்ந்து, சென்னை சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்ட போது, அவர்கள் மைசூரு சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டனர். அவர்களை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. வழக்கறிஞர் உதவியை நாடிய போது, 20,000 ரூபாய் கட்டணம் மற்றும் போக்குவரத்து செலவு கேட்டுள்ளனர். அவ்வளவு தொகைக்கு வழி இல்லாததால், அவர் நேரடியாக மைசூரு சென்று வங்கி கணக்கை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். இதுபோன்று ஏராளமான நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மைசூரு போலீசார் மட்டும், நுாற்றுக்கணக்கான நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும், வங்கி கணக்கை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாமல், அதில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.வங்கி அலுவலர்கள், 'எங்களால் எதுவும் செய்ய முடியாது. போலீசார் மீண்டும் கூறினால் மட்டுமே, வங்கி கணக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்' என்கின்றனர். பலர் அலைய முடியாமல், வேறு வங்கி கணக்கை துவக்கி உள்ளனர்.

நேரில் ஆஜர்

தமிழகத்தை பொறுத்தவரை, சைபர் குற்றங்களால்பாதிக்கப்பட்ட நபர்கள், 1930 மற்றும் www.cyber crime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கின்றனர். இந்த இணைய தளத்துடன் வங்கிகள் இணைக்கப்பட்டு இருப்பதால், உடனடியாக புகார்தாரரின் வங்கி கணக்குகள் முடக்கப்படும். அதேபோல, சைபர் குற்றவாளிகள் மோசடி பணத்தை செலுத்திய வங்கி கணக்குகளும் முடக்கப்படுகின்றன. இத்தகையை வங்கி கணக்குகளை மீட்க, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரிகள், வங்கிகளுக்கு கடிதம் கொடுக்கின்றனர். அவர்களிடம் விளக்கம் அளித்து, வங்கி கணக்கை மீண்டும் இயக்க வைக்கின்றனர்.ஆனால், சைபர் குற்றவாளிகளால் வெளிமாநில நபர்கள் பாதிக்கப்பட்டு, இணையதளத்தில் புகார் அளித்தாலோ அல்லது சைபர் குற்றவாளிகள் பணம் செலுத்தி இருந்தாலோ, தமிழகத்தை சேர்ந்தவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டால், அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வர, புகார்தாரர் வசிக்கும் மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதுகுறித்து, தமிழக சைபர் கிரைம் போலீசாரை கேட்டபோது, 'வெளிமாநில வழக்குகளில், சம்பந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராக வேண்டும் என, அந்த மாநில போலீசார் கூறுகின்றனர். இதனால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை' என்றனர்.

கிடைக்குமா அரசு உதவி?

பாதிக்கப்பட்ட நபர்கள் கூறியதாவது: சாதாரண நபர்களின் வங்கி கணக்கிற்கு திடீரென பணம் வந்தால், அவர்கள் அந்த பணம் யாரிடம் இருந்து வந்தது என, வங்கியில் விசாரிக்க முடியும். ஆனால், வியாபாரிகளால் அவ்வாறு விசாரிக்க முடியாது. ஏனெனில், தினமும் ஏராளமான நபர்கள் பொருட்களை வாங்கியதற்கு பணம் செலுத்துவர். அந்த பணம் எப்படி வந்தது என்பது, அவர்களுக்கு தெரியாது.சைபர் கிரைம் போலீசார், ஒருவர் வங்கி கணக்கில், சைபர் குற்றம் தொடர்புடைய பணம் செலுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தால், அந்த பணத்தை மட்டும் முடக்க வழி செய்ய வேண்டும். அந்த நபருக்கு விபரத்தை தெரிவிக்க வேண்டும். இதை எதுவும் செய்யாமல், வங்கி கணக்கை முடக்கினால், அப்பாவி மக்கள் என்ன செய்ய முடியும்?வெளிமாநில போலீசார் வங்கி கணக்குகளை முடக்கினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக போலீசார் உதவிகள் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு கூட செல்லலாம். வடமாநிலங்களுக்கு எப்படி செல்ல முடியும்?அங்குள்ள போலீசாருடன் தொடர்பு கொள்ள, மொழி ஒரு பிரச்னையாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, ஏராளமானோர் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 30, 2024 14:43

இதையே வேறு ஒரு சைபர் குற்றவாளி உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டது நீங்கள் உடனடியாக எங்களுக்கு வீடியோ கால் மூலம் விளக்கம் தந்து விட்டு வேறு வங்கி கணக்கிலிருந்து எங்களுக்கு குறிப்பிட்ட தொகை கட்டினால் நாங்கள் உங்கள் முடக்கப்பட்ட கணக்கை புதுப்பித்து தருகிறோம் என சொல்லி ஒரு க்யூஆர் கோட் அனுப்பி மோசடி செய்தாலும் செய்யலாம். எச்சரிக்கை தேவை.


Columbus
நவ 29, 2024 19:49

Only the amt in dispute should be frozen. Not the entire balance in the account. But the police will claim that they are not aware of the extent of fraud.


வைகுண்டேஸ்வரன்
நவ 29, 2024 09:17

எல்லா சிறு, குறு தொழில் மற்றும் வியாபாரிகள் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். மதியம் வரை ஒரு QR கோட் பிற்பகலில் இரண்டாவது QR கோட் வைத்து தான் தொழில் நடத்த வேண்டும் என்று நான் விளக்கவுரைகளில் சொல்வதுண்டு.


Rangarajan Cv
நவ 29, 2024 08:34

FM


எழில்
நவ 29, 2024 06:09

இந்த வங்கிக்.காரங்க கிட்டே தொங்குவதற்கு பதில் கேஷே தேவலைன்னு ஆயிடுது. குற்றவாளிகளைப் புடிக்க துப்பில்லேன்னாலும் பொதுமக்களை முடக்குவதில் சூரத்தனம் தெரியுது. வழக்கமா for your safety and security, we are freezing your account நு பல்கவி வேறே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை