நாகப்பட்டினம் : மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாக, பா.ஜ., மாநில செயலர் உள்ளிட்ட ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் ஒன்பது பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.அனுமதி கூடாது:
நாகப்பட்டினம் அடுத்துள்ள நாகூரைச் சேர்ந்தவர் தங்க முத்துகிருஷ்ணன். சிவசேனா மாநில செயலரான இவரது மனைவி தங்கம் அம்மாள், கடந்த 1995ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி பார்சல் வெடிகுண்டு வாயிலாக படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து, ஆண்டுதோறும் தங்கம் அம்மாள் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு ஹிந்து அமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று வருகின்றனர்.நாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டு நடந்த நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்ற ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குறித்து விமர்சித்து பேசியுள்ளார். இதற்கு, அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானம் செய்தனர். இதனால், கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.இது தொடர்பாக, இரு தரப்பினரும் நாகூர் போலீசில் புகார் அளித்தனர். மேலும், வி.ஏ.ஓ., தேவகுமாரிடம் புகார் பெற்று, கூட்டத்தில் பங்கேற்ற ஹிந்து திராவிட மக்கள் கட்சி நிறுவனர் ரமேஷ்பாபு மீது போலீசார் வழக்கு பதிந்து, அவரை சிறையில் அடைத்தனர்.கடந்த ஆண்டு போலவே இந்தாண்டும் பிரச்னை ஏற்படலாம். அதனால், இந்தாண்டு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என, போலீசாருக்கு சில முஸ்லிம் அமைப்புகள் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டன. அதை வைத்து, இந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி, தங்கம் அம்மாள் நினைவு நாள் கூட்டத்திற்கு, நாகூர் போலீசார் அனுமதி மறுத்தனர். அதையடுத்து, சிவசேனா மாநில செயலர் தங்க முத்துகிருஷ்ணன், கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நிபந்தனைகளுடன் கூட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு போலீசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதையடுத்து, கடந்த 7ம் தேதி, நாகூரில் தங்கம் அம்மாள் நினைவு நாள் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள வேண்டிய அக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில செயலர் அஸ்வத்தாமன் பங்கேற்றார். பல்வேறு ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கூட்டத்தில் பங்கேற்று பேசினர். இந்நிலையில், கூட்டத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக, சிவசேனா மாநில செயலர் தங்கமுத்துகிருஷ்ணன், பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த குடந்தை பாலா, விஜயகிருஷ்ணன், கண்ணதாசன், சுப்பிரமணியன், பிரபு, ராஜகுரு, செல்வம் ஆகிய ஒன்பது பேர் மீது, நாகூர் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் தேடி வருகின்றனர். நாகை போலீசார் கூறியதாவது: கூட்டத்தில் அஸ்வத்தாமன் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோர், மத உணர்வுகளைத் துாண்டும் வகையில் ஆக்ரோஷமாகப் பேசினர். அதற்கான வீடியோ பதிவுகள் உள்ளன. அதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, வழக்கு பதியச் சொல்லி யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.'மத உணர்வுகளை துாண்டவில்லை'
இது தொடர்பாக தங்க முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் கூறியதாவது: தங்கம் அம்மாள் கொலையில், வெடிகுண்டு பார்சலை அனுப்பியது முஸ்லிம் தீவிரவாதிகள் என, போலீசார் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். அதனால், வழக்கில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக்கை முஸ்லிம் தீவிரவாதி என நாங்கள் குறிப்பிட்டு மேடையில் பேசினோம். அஸ்வத்தாமனும் அதையே வலியுறுத்திப் பேசினார். இதைத்தான் மத உணர்வை துாண்டும் பேச்சு என போலீஸ் சொல்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.