மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், இனி வேட்பாளர்களின் பட்டியலுடன், அவர்களுடைய வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன. இந்த புதிய நடைமுறை வரும் பீஹார் சட்டசபை தேர்தல் முதல் அமலுக்கு வருகிறது என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. நம் நாட்டின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழா என்றால் அது தேர்தல் தான். ஓட்டுச்சீட்டில் முத்திரை குத்தி, ஓட்டுப்பெட்டியில் செலுத்திய காலத்தில் இருந்து தற்போது மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திர காலத்திற்கு வந்துவிட்டோம். வழக்கமாக இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், அவர் சார்ந்த கட்சியின் சின்னம் ஒட்டப்பட்டிருக்கும். அதன் அருகில் இருக்கும் மின்னணு பொத்தானை அழுத்தினால் போதும், நாம் விரும்பிய வேட்பாளருக்கு, நம் ஓட்டு சென்றுவிடும். குழப்பம் இந்த முறையில் மேலும், தெளிவை கொண்டு வரும் நோக்கில், தேர்தல் கமிஷன் புதிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி மின்னணு ஓட்டு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருடன், இனி அவரது வண்ணப் புகைப்படமும் இடம் பெறும். அதன் அருகில் அவர் போட்டியிடும் கட்சியின் சின்னமும் இருக்கும். இதன் மூலம், வாக்காளர்கள், நன்கு அறிந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும். கடந்த முறை தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலின்போது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அதே தொகுதியில், அதே பெயரில் 10 வேட்பாளர்கள் களம் இறங்கியதால், அவரது வெற்றி பறிபோனதாக சொல்லப்படுகிறது. ஒரே பெயரில் இருவேறு வேட்பாளர்கள் இருப்பதால் ஏற்படும் இந்த குழப்பத்தை தவிர்க்க, இந்த புதிய முறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்யவுள்ளது. முதல் முறையாக இந்த மாற்றம், விரைவில் நடக்க உள்ள பீஹார் சட்டசபை தேர்தலில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக தேர்தல் கமிஷன் தனது விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்து உள்ளது. Galleryஅதன்படி தேர்தல் நடத்தும் 49பி விதிகளின்படி, வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் தெளிவாக இடம்பெறும். வாக்காளர்கள் தெளிவாக காணும் வகையில், அந்த புகைப்படம் ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவில் இடம் பெறும். கூடுதலாக, எந்த வரிசையில் வேட்பாளர் பெயர் இருக்கிறது என்பதை சுலபமாக கண்டறிய சீரியல் எண்களும் இடம் பெறும். இதற்கு முன், வேட்பாளரின் பெயர், கட்சி சின்னம், சீரியல் எண் போன்ற அடிப்படை விபரங்கள் மட்டுமே இருக்கும். புகைப்படங்கள் இல்லாமல் அல்லது கருப்பு வெள்ளை வண்ணத்தில் புகைப்பட அளவு ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தது. புதிய திட்டம் ஆனால், தற்போது திருத்தப்பட்ட விதிகளின் கீழ், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இடம்பெறும் வடிவம் மற்றும் பெயர் உள்ளிட்ட அச்சு விபரங்கள் குழப்பத்தை தவிர்க்கும் வகையில் தெளிவாக இருக்கும். தேர்தல் நடைமுறைகள், வாக்காளர்களுக்கு சுலபமாக புரியும் வகையில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என, கடந்த ஆறு மாதமாக தேர்தல் கமிஷன் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வந்தது. அந்த வகையில், வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களையும் பதிவிடுவது உட்பட 28 புதிய விஷயங்களை தேர்தல் கமிஷன் புகுத்தி இருக்கிறது.
என்ன மாற்றம்?
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் பட்டியலில், இனி வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களும் இடம் பெறும். தெளிவாக தெரியும் வகையில், வேட்பாளர்களின் முகம் மட்டும் மூன்றில் ஒரு பங்கு அளவு இருக்கும் வேட்பாளர் அல்லது 'நோட்டா' எனப்படும் யாருக்கும் ஆதரவு இல்லை என்பது இடம் பெற்றிருக்கும் சீரியல் எண்கள் அளவு, தெளிவுக்காகவும் தடிமனாகவும் இருக்கும் ஒரே மாதிரி இருக்கும் வகையில் வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் நோட்டா ஒரே எழுத்து அளவில் பொறிக்கப்பட்டிருக்கும். எழுத்தின் அளவு சுலபமாக படிக்கும் வகையில் இருக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்படும் வேட்பாளர்கள் அடங்கிய இந்த விபரங்கள் அனைத்தும் 70 ஜி.எஸ்.எம்., காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். சட்டசபை தேர்தல் என்றால் 'பிங்க்' நிற காகிதம் பயன்படுத்தப்படும் வரும் பீஹார் சட்டசபை தேர்தலில் இருந்து இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. -- நமது சிறப்பு நிருபர் -