உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  மீண்டும் களமிறங்கும் சந்திரசேகர ராவ்; அதிரும் தெலுங்கானா அரசியல் களம்

 மீண்டும் களமிறங்கும் சந்திரசேகர ராவ்; அதிரும் தெலுங்கானா அரசியல் களம்

தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், 71, தீவிர அரசியலில் மீண்டும் களமிறங்கி உள்ளதால், அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆந்திராவில் இருந்து பிரிந்து, 2014ல் தனி மாநிலமாக தெலுங்கானா உருவானது. இதற்கான போராட்டங்களை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ். 2014 மற்றும் 2018 சட்டசபை தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்ற அவர், 2023 டிசம்பரில் நடந்த தேர்தலில், காங்கிரசிடம் படுதோல்வி அடைந்தார்.

டாக்டர்கள் அறிவுறுத்தல்

இதையடுத்து, காங்கிரசைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வரானார். தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் பாரத் ராஷ்ட்ர சமிதி தோல்வி அடைந்தது. சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் தோல்வி களால் அதிருப்தியில் இருந்த சந்திரசேகர ராவ், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். இதற்கிடையே, வீட்டில் அவர் வழுக்கி விழுந்ததில் , இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியதை அடுத்து, கட்சி பொறுப்பை தன் மகன் ராமா ராவிடம் ஒப்படைத்தார். ஹைதராபாதில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் உள்ள எர்ரவல்லி பண்ணை வீட்டில் கடந்த இரு ஆண்டுகளாக சந்திரசேகர ராவ் ஓய்வு எடுத்து வந்தார். இரு முறை மட்டுமே கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிய அவர், வெளியே தலை காட்டவில்லை. உடல்நிலை தற்போது தேறியதை அடுத்து, தீவிர அரசியலில் சந்திரசேகர ராவ் மீண்டும் களமிறங்கி உள்ளார். சமீபத்தில் பாரத் ராஷ்ட்ர சமிதியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், புது தெம்புடன் காணப்பட்டார். கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன் பாணியில், 'பஞ்ச்' வசனங்களை பறக்கவிட்டு காங்கிரசையும், தெலுங்கு தேசத்தையும் திணறடித்தார். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு விவகாரத்தில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை, சந்திரசேகர ராவ் குற்றஞ்சாட்டினார். விசாகப்பட்டினத்தில் நடந்த ஆந்திர முதலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சித்த அவர், ''10,000 கோடி ரூபாய் முதலீட்டை கூட ஆந்திரா ஈர்க்கவில்லை; சமையல்காரர் களை வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றனர்,'' என கிண்டலடித்தார்.

சும்மா விட மாட்டேன்

இதன் மூலம் ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி உடன் நட்பு தொடர்வதை அவர் உறுதிப்படுத்தினார். பா.ஜ.,வுடன் பாரத் ராஷ்ட்ர சமிதி இணையப் போவதாக உலா வரும் தகவல்களை திட்டவட்டமாக மறுத்த சந்திரசேகர ராவ், ''தெலுங்கானாவுக்கு முதல் எதிரி பா.ஜ., தான்,'' என்றார். முதல்வர் ரேவந்த் ரெட்டியையும் அவர் விட்டு வைக்கவில்லை. ''ரியல் எஸ்டேட் தொழிலை மட்டுமே ரேவந்த் ரெட்டி ஊக்குவிக்கிறார். தன் பழைய குருவான சந்திரபாபு நாயுடுவை மகிழ்விக்க, தெலுங்கானா நலன்களை அவர் அடகு வைக்கிறார்,'' என, சந்திரசேகர ராவ் காட்டமாக விமர்சித்தார். காங்கிரசில் சேர்வதற்கு முன், தெலுங்கு தேசம் கட்சியில் ரேவந்த் ரெட்டி இருந்தார். தொடர்ந்து பேசிய சந்திரசேகர ராவ், ''இதுவரை நிலைமை வேறு; இனி நடக்கப் போவது வேறு. நான் ஹைதராபாதிலேயே இருப்பேன். தீவிர அரசியலில் ஈடுபடுவேன். உங்களை சும்மா விட மாட்டேன்; தோலை உரிக்க வருகிறேன்,'' என, ஆளும் காங்கிரசை வெளுத்து வாங்கினார்.

சந்தேகமில்லை

தீவிர அரசியலில் சந்திரசேகர ராவ் மீண்டும் களமிறங்கி உள்ளதால், அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில், தெலுங்கானா மட்டுமின்றி ஆந்திர அரசியல் களமும் அதிரும் என்பதில் சந்தேகமில்லை. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ