மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி மலருமா?
26 minutes ago
ஜம்மு - காஷ்மீரில், தேசிய மாநாட்டு கட்சியின் கோட்டையாக கருதப்படும் புத்காம் தொகுதியில், அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது, முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீரில், 2024 செப்டம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், புத்காம், கந்தர்பால் ஆகிய தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஒமர் அப்துல்லா வென்றார். சட்டப்படி, எம்.எல்.ஏ.,வாக ஒரு தொகுதியில் மட்டுமே இருக்க முடியும் என்பதால், புத்காம் தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். கடந்த 11ல், புத்காம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஆளும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அகா சையத் மஹ்மூத் அல் மோசாவியை, பிரதான எதிர்க்கட்சியான, முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆகா சையத் முன்தாசிர், 4,478 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தேசிய மாநாட்டு கட்சியின் கோட்டையாக கருதப்படும் புத்காம் தொகுதியில், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி வென்றது, காஷ்மீர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது, முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு தனிப்பட்ட தோல்வியாகவும் பார்க்கப்படு கிறது. காரணம், 2024 சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் அவர் வென்றிருந்தார். தற்போது, எதிர்க்கட்சி வசம் சென்றிருப்பதால், அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார். ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் புத்காம் தொகுதியில், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி., ஆகா சையத் ருஹுல்லா குடும்பத்துக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இவர், முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார். இதனால், இவரது ஆதரவாளர்கள், மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆகா சையத் முன்தாசிருக்கு ஓட்டளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், புத்காம் தொகுதியில் இருந்து ஒமர் அப்துல்லா ராஜினாமா செய்ததால் அதிருப்தி அடைந்த வாக்காளர்களும், ஆகா சையத் முன்தாசிருக்கு ஓட்டளித்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, தேசிய மாநாட்டு கட்சியின் பிரசாரம் மந்தமாக இருந்தது. அக்கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படும் ஆகா சையத் ருஹுல்லா, பிரசாரத்தில் இருந்து விலகியது, மக்கள் ஜனநாயக கட்சியின் வெற்றியை எளிதாக்கி விட்டது. புத்காம் தொகுதியை கைப்பற்றிய மெஹபூபா முப்தி, காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி புத்துயிர் பெற்று வருவதாக தெரிவித்தார். நீண்ட காலமாக தேசிய மாநாட்டு கட்சியின் கோட்டையாக விளங்கிய புத்காம் தொகுதியில் மண்ணை கவ்வியது, முதல்வர் ஒமருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. - நமது சிறப்பு நிருபர் -:
26 minutes ago