தமிழக அரசின் நிபந்தனையை ஏற்று, நிலத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்று மத்திய அரசு மறுத்துள்ளதால், விமான நிலைய விரிவாக்கப் பணி, இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.கோவை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக இருப்பினும், இரண்டு வெளிநாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள், இங்கு தொழில் துவங்க தயங்கும் நிலை உள்ளது.இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 2010ல் தி.மு. க., ஆட்சியின் போது, அரசாணை வெளியிடப்பட்டது. பத்தாண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்த பணி, மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்த பின்பு, பெருமளவில் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டில் முடிவடைந்து விட்டது.விரிவாக்கத்துக்கு 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்தித் தருமாறு, தமிழக அரசிடம் விமான நிலைய ஆணையம் கோரியிருந்தது. பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான 135 ஏக்கர் நிலமும் இதில் உள்ளடங்கியுள்ளது.தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையின்படி (NCAP-National Civil Aviation Policy), இந்த நிலத்தையும், மாநில அரசு தான் எடுத்துத் தர வேண்டும். அதாவது, இந்த நிலத்துக்கு இணையாக மாற்று நிலம் அளிக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு, பாதுகாப்புத்துறைக்கு மாற்று நிலம் தரவில்லை.மாறாக, இரண்டும் மத்திய அரசுத்துறை என்பதால், இதை இலவசமாகத் தர வேண்டுமென்று கருத்துரு அனுப்பியது. இதில் எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்காத நிலையில், கடந்த செப்.,11ல், கோவை கலெக்டரால் ஒரு செயல்முறை ஆணை வெளியிடப்பட்டது.அதில், பாதுகாப்புத்துறை நிலம் மற்றும் 558 ஏக்கர் பட்டா நிலத்தில், விரிவாக்கப்பணியைத் துவங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.அந்த ஆணையில் (Enterupon Permission) இந்த நிலம் தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன், விமான ஓடுதள விரிவாக்கம், வாகனங்களுக்கான பாதை உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் முக்கியமான ஒரு நிபந்தனையும் இடம் பெற்றிருந்தது.அதாவது, தமிழக அரசுக்கும், விமான நிலைய ஆணையத்துக்கும் இடையில் இறுதி ஒப்பந்தம் போடும் முன், இந்த நிலத்தை குத்தகைக்கோ, உள் குத்தகைக்கோ விடக்கூடாது; வேறு யாருடைய பெயருக்கும் மாற்றக் கூடாது என்பதே அது.இந்த ஆணை வெளியாகி, நான்கு மாதங்களாகியும், இந்த நிலத்தை விமான நிலைய ஆணையம் எடுத்துக் கொள்ளவில்லை. தனியாரிடம் ஒப்படைப்பா?
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் ஒப்படைக்கப்பட்டு விட்டதா, விரிவாக்கத் திட்டம் தயாராகவுள்ளதா என்பது உள்ளிட்ட சில கேள்விகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விமான நிலைய ஆணையத்திடம் கேட்டதற்கு, 'நிலம் இன்னும் தமிழக அரசால் ஒப்படைக்கப்படவில்லை; நிலம் கிடைப்பதற்கேற்ப திட்டம் தயாராகும்' என்று பதில் தரப்பட்டுள்ளது.அதே நேரத்தில், தனியாரிடம் இதை ஒப்படைக்கும் திட்டம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.கோவை விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதால் தான், இந்த நிபந்தனைக்கு உட்பட்டு நிலத்தை ஏற்க மறுப்பதாக, தமிழக அரசு அதிகாரிகள் சந்தேகம் எழுப்புகின்றனர்.இந்நிலையில், திருச்சி விமான நிலையம், 1,200 கோடி ரூபாய் மதிப்பில், விமான நிலைய ஆணையத்தால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இதேபோல, ஆணையமே 'இபிசி' முறையில், (EPC -Engineering, Procurement and Construction) கோவை விமான நிலையத்தையும் விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற ஆலோசனையையும் பலர் முன் வைக்கின்றனர்.இந்த விஷயத்தில், இரு அரசுகளும் ஒருமித்த முடிவு எடுத்து, கோவை விமான நிலைய விரிவாக்கப்பணியை உடனே துவக்க வேண்டும் என்பதே, கொங்கு மண்டல மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு.விமான நிலைய ஆணையத்தின் முடிவின்படி, தமிழக அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு, நிலத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்று, கோவை விமான நிலைய இயக்குனரிடமிருந்து கடிதம் வந்துள்ளது. இதுபற்றி, மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.- கிராந்திகுமார், கோவை கலெக்டர்.- நமது சிறப்பு நிருபர் -