கோவை: விளையாட்டில் சாதனை துடிப்பு கொண்ட வீரர், வீராங்கனைகள் நிறைந்த கோவையில், 'மினி ஸ்டேடியம்' போன்ற கட்டமைப்பு வசதிகளை எஸ்.டி.ஏ.டி., ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது(எஸ்.டி.ஏ.டி.,), வீரர், வீராங்கனைகளிடம் மறைந்துள்ள திறமையை வெளிப்படுத்த தேவையான பயிற்சி, நிதியுதவி அளிப்பதுடன், கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது.கோவையை பொறுத்தவரை, இங்கேயே பிறந்தவர்கள் வீரர்களாக அதிகம் உருவெடுத்து வருகின்றனர். கடந்தாண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு, கல்லுாரி மாணவர்கள், 16 ஆயிரத்து, 809 பேரும், பள்ளி மாணவர்கள், 18 ஆயிரத்து, 679 பேரும் பதிவு செய்திருந்தனர்.தவிர, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என, 39 ஆயிரம் பேர் போட்டியில் திறமையை வெளிப்படுத்தினர். இப்படி, வீரர்கள் குவிந்துள்ள கோவையில், தடகளம் போன்ற சில விளையாட்டுகள் தவிர, பல விளையாட்டுகளுக்கு வெளியே, கட்டணம் செலுத்தி, வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர்.ஸ்கேட்டிங், டென்னிஸ், ஷட்டில், துப்பாக்கி சுடுதல், நீச்சல், பாக்சிங் உள்ளிட்ட விளையாட்டுகளில், பணம் இருப்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலை இங்கு காணப்படுகிறது. ஏழை மாணவர்களும் சாதிக்கும் வண்ணம், கோவையில் கட்டமைப்பு வசதிகளை, துணை முதல்வர் உதயநிதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் கூறுகையில், 'கபடி போட்டிக்கு, மாநகராட்சி மைதானத்தில் மண் தரையில் பயிற்சி எடுக்க வேண்டியுள்ளது. தடகளம், வாலிபால், கூடைப்பந்து தவிர இதர விளையாட்டுகளுக்கு, மாதம் பல ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலை உள்ளது. சென்னை போன்று இங்கும் வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும்' என்றனர்.ஸ்கேட்டிங், டென்னிஸ், ஷட்டில், துப்பாக்கி சுடுதல், நீச்சல், பாக்சிங் உள்ளிட்ட விளையாட்டுகளில், பணம் இருப்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலை இங்கு காணப்படுகிறது. ஏழை மாணவர்களும் சாதிக்கும் வண்ணம், கோவையில் கட்டமைப்பு வசதிகளை, துணை முதல்வர் உதயநிதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசின் பார்வை படுவது எப்போது?
'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டியில், சென்னை, செங்கல்பட்டு அடுத்து, 102 பதக்கங்களுடன், கோவை மூன்றாம் இடம் பிடித்தது. கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த தெற்காசிய மூத்தோர் தடகள போட்டியில், கோவை அணியினர் மட்டும், 75 பதக்கங்களுடன் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்படி, இளையோர் முதல் மூத்தோர் வரை சாதனை படைக்கும் கோவை மீது, அரசின் பார்வை திரும்ப வேண்டும் என்பது, அனைவரது எதிர்பார்ப்பு!