உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இ.கம்யூ., கட்சிக்குள் திமுக குழப்பம் ஏற்படுத்துவதாக புகார்

இ.கம்யூ., கட்சிக்குள் திமுக குழப்பம் ஏற்படுத்துவதாக புகார்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள், தி.மு.க., குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அணி மாறி ஆதரவு அளித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் த.வெ.க., தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அமைச்சரவையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெறாவிட்டாலும், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்து விட்டன. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தி.மு.க., குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இ.கம்யூ., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்தாலும், தி.மு.க.,வுக்கு ஆதரவாக இ.கம்யூ., முன்னாள் மாநில செயலர் முத்தரசன், சுப்பராயன் எம்.பி., பேசி வருகின்றனர். அவர்களை வைத்து, கட்சியில் குழப்பத்தை, தி.மு.க., உருவாக்கி வருகிறது. தஞ்சாவூரில், ஒரு திருமண விழாவில் பேசிய முத்தரசன், 'ஸ்டாலின் அன்று போல் இன்றும் சோர்வின்றி இயங்குகிறார். தி.மு.க.,வோடு நட்புடன் பேச்சு தொடரும்' என்றார். இதுபோல, கரூர் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது, 'அதிகார துஷ்பிரயோகம்' என சுப்பராயன் விமர்சித்துள்ளார். இ.கம்யூ., கட்டுப்பாட்டு குழு தலைவராக இருக்கும் சுப்பராயன், நீதிபதி போல் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால், கட்சியில் குழப்பத்தை உருவாக்கும் வகையில், கருத்துகளை கூறுகிறார்; இதன் பின்னணியில் தி.மு.க., இருப்பதாக தெரிகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

த.வெ.க., அரசில் அமைச்சர் பதவி

மேகதாது அணை கட்டும் முடிவை, கர்நாடகா அரசு கைவிட வலியுறுத்தி, இ.கம்யூ., சார்பில், நேற்று ஓசூரில் இருந்து, மேகதாது நோக்கி நடைபயணம் புறப்பட்டனர். இரண்டு கி.மீ., சென்ற அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். முன்னதாக, இ.கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் அளித்த பேட்டி: டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுதுமே காவிரி நீருக்காக ஏங்கி நிற்கிறது. மேகதாது விவகாரத்தில் தமிழக முதல்வர் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் செவி சாய்க்க வேண்டும்; அவர் பார்வையாளராக இருந்து விடக் கூடாது.இ.கம்யூ., - மா.கம்யூ., மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கி உள்ளோம். இது தேர்தல் கூட்டணி அல்ல; உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு குழு. தேவை ஏற்பட்டால், உள்ளாட்சி தேர்தலில் கம்யூ., கட்சிகள் இணைந்து தனித்து களம் காணும். த.வெ.க., தலைமையிலான அரசில் இ.கம்யூ., அமைச்சர் பதவியை வாங்கும் சூழல் வரும். அப்போது, தளி தொகுதி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் அமைச்சராகலாம்; அதற்கான காலம் நெருங்குகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை