உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  காங்கிரஸ் கூட்டணியால் பிரயோஜனம் இல்லை: விஜய் முடிவின் பின்னணியில் பீஹார் தேர்தல்

 காங்கிரஸ் கூட்டணியால் பிரயோஜனம் இல்லை: விஜய் முடிவின் பின்னணியில் பீஹார் தேர்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற முடிவில் இருந்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது, தன் முடிவில் இருந்து பின் வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கி, விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் பிரமாண்ட மாநாடுகளை நடத்திக் காட்டினார், நடிகர் விஜய். இரு மாநாடுகளுக்கும், திரண்டு வந்த கூட்டத்தை கண்டு, தமிழக அரசியல் கட்சிகள் மிரண்டன. அதன் தொடர்ச்சியாக, சில மாதங்களுக்கு முன், தன் தேர்தல் பிரசாரத்தை விஜய் துவங்கினார். கட்டுக்கடங்கா கூட்டம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் செய்த அவர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர், அரியலுார் மாவட்டங்களுக்கு சென்று திரும்பினார். அப்போது, ஏராளமானோர் திரண்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால், கரூரில், நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இதையடுத்து, பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தார் விஜய். இதற்கிடையே, தங்களுடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகளோடு பேச முடிவெடுத்து, த.வெ.க., முன்னணி தலைவர்கள் பலரையும், பேச்சு நடத்த அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில், அ.தி.மு.க., - காங்., என பல கட்சியினருடனும் அவர்கள் பேச்சு நடத்தினர். அ.தி.மு.க., தரப்பில், த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சில் ஈடுபடவில்லை என வெளியில் சொல்லப்பட்டது. ஆனால், பேச்சின் போது, த.வெ.க.,வுக்கு குறைந்த எண்ணிக்கையில் சீட் ஒதுக்குவதாகவும், அ.தி.மு.க.,வோடு கூட்டணிக்கு வந்தால், ஆட்சியில் பங்கு கோஷம் எழுப்பக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அ.தி.மு.க.,வுடன் நடந்த கூட்டணி பேச்சை நிறுத்திய த.வெ.க., தலைவர்கள், அடுத்த முயற்சியாக, தமிழக காங்., தலைவர்கள் பலரோடு பேச்சு நடத்தி உள்ளனர். அவர்களுடன் நடத்திய பேச்சில், காங்கிரசுக்கு அதிக எண்ணிக்கையில் 'சீட்' ஒதுக்குமாறு 'டிமாண்ட்' வைக்கப் பட்டுள்ளது. மேலும், கூட்டணி குறித்து, ராகுலிடமும் சோனியாவிடமும் நேரடியாக விஜய் பேசி, அவர்களை சம்மதிக்க வைத்தால் மட்டுமே, த.வெ.க., - காங்., கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது எனவும் விஜய் தரப்பிடம் காங்., தரப்பில் சொல்லி உள்ளனர். மேலும், தமிழக காங்.,கில் இருக்கும் 60 சதவீத நிர்வாகிகள், த.வெ.க.,வுடன் கூட்டணி என்ற முடிவில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த நம்பிக்கை வார்த்தைகளால், காங்கிரசோடு கூட்டணி அமைத்து, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளலாம் என, த.வெ.க., மேல் மட்டத்தில் வேகமான பேச்சு நடந்தது. இந்த சூழலில், அந்த பேச்சுகளுக்கு வேட்டு வைக்கும் விதமாக, பீஹார் சட்டசபை தேர்தல் முடிவு அமைந்தது. படுதோல்வி அங்கு, 'மஹா கட்பந்தன்' கூட்டணியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இடம் பெற்ற காங்கிரஸ், ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி யாதவிடம் மல்லுக்கட்டி 61 தொகுதிகளை கேட்டு வாங்கியது. ஆனால், வெறும் 6 இடங்களில் மட்டுமே காங்., வெற்றி பெற்றது. அது மட்டுமல்ல, காங்., இடம்பெற்ற கூட்டணியும் படுதோல்வி அடைந்தது. பீஹார் நிலவரத்தை பார்த்து கலவரமான த.வெ.க., நிர்வாகிகள், காங்., உடன் கூட்டணி அமைத்து, கூடுதல் சீட் வழங்கினாலும், தமிழகத்திலும் இதே நிலை தான் ஏற்படும் என, நினைக்கின்றனர். இதனால், காங்கிரசுடன் பேச்சு நடத்துவதை நிறுத்தி விட்டு, தனித்தே தேர்தல் களத்தை எதிர்கொள்ளலாம் என்ற முடிவுக்கு த.வெ.க., தலைமை வந்திருக்கிறது. இதையடுத்தே, தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சைத் துவங்குவதற்கு, காங்கிரஸ் சார்பாக ஐவர் குழுவை, காங்கிரஸ் மேலிடம் அறிவித்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை